skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, April 17, 2011

ஓர் பரி ....


சதுரித்த நிலமொன்றில்
நின்றிருந்தது....
அப்புரவி ...
அழகாய் கண்களை விழித்து
உலகை வெறித்து பார்த்துக்கொண்டு

முழுதும் நகைகளை பூட்டி
கடிவாளங்களுக்கு மத்தியிலும்
சிரித்து..
பற்களை மட்டும் காண்பித்து

ஏனோ?
கனைப்பு சப்தம் மட்டும்
கேட்பதாய் இல்லை ...


பின்னங்கால்களை மெல்ல உயர்த்தி
ஓட பார்த்ததோ?
தளைப்பூட்டிய கால்கள்
பூமிக்குள் வேரோடிப்போய் ....

உயிர்ப்பை தொலைத்து
வான்நோக்கி உயர்ந்து
நின்றது
அந்த வெங்கலப்புரவி ..
சுமார் 15 அடி உயரத்தில் ,

அலங்காரமாய் ...
அடிமையாய் ...



Posted by shammi's blog at 9:38 PM 3 comments
Labels: திண்ணை

Sunday, April 10, 2011

பறவை , பட்டம் மற்றும் மழை


   
எங்கோ தாவி சென்ற பறவை
விட்டு சென்ற எச்ச மிச்சங்கள்
நிழல் கவிதைகளை
அள்ளி தெளித்தன


பிடிமானக் கயறு அறுத்து கொண்டு
பட்டம் , பறவைகளோடு
போரிட்டது ...                                      

காற்றின் அலைவரிசை சாரமாக
சலனங்கள் தவிர்த்து ,
ஒடுக்கப்பட வீதியில்
ஒற்றையாய் திரிந்தது ...

ஓங்கியடித்த மழையில்
வேகத்தில் முழுக்க நனைந்து
ஓரமாக கிழிந்து
நிலைகுலைந்து தரை தொட்டது
கண்ணீரைக் கழுவியது
மழைத் துளிகள் ..
Posted by shammi's blog at 7:07 PM 5 comments
Labels: திண்ணை

Saturday, April 2, 2011

நிழல் மோனம் ..



கூர்மங்கள் மழுங்கிய வாட்களினால்
ஓர் நிழல் யுத்தம்
இருள் போர்வையை கிழித்து
வெளியேறியது வியர்வை வடித்த நிலவு

சங்கடை வார்த்த பால்
மெல்ல உள்ளிறங்க ...
துப்பிய மிச்சமோ பால் வீதியின்
எச்ச நட்சத்திரங்கள் ?

சப்த நாடிகளுள் சூழ் கொண்டு
எரித்த ..இவ்வேளையில்
துயில் கொண்டது அவளின் மௌன மோனம் ...


Posted by shammi's blog at 9:16 PM 2 comments
Labels: திண்ணை

Sunday, March 27, 2011

மீள்தலின் இருப்பு

மறுப்புகள் தாங்கியே இருக்கும் 

அவளது விழிகள் 
 விருப்புகள் போல காட்டிக்கொள்வதில் 
மகா பிரயத்தனங்கள் செய்துக்கொள்வாள் 

பொம்மலாட்ட கைகள் ஆட்டுவிக்க 
ஆடுகிறாள் ...நடனங்களை
உக்கிர நடனங்களில் மட்டுமே 
தெரியும் அவளது உயிர்ப்பு ...

காலக் கோள்கள் அசைத்து பார்த்ததில் 
அசைய மறுத்த அவள் பாதம் 
விலங்கிடப்பட்டது ...
புரட்சி பேசிய அவள் நாவு 
துண்டிக்கப்பட்டது 

இன்னும் இன்னும் என எதிர்ப்புக்கள் 
வலுக்க 
இப்போதெல்லாம் அவள் 
மறுப்புகளை கண்களில் மட்டும் 
தேக்கி கொண்டுவிட்டாள்..

மீட்புக்கென 
அடைக்கப்பட ரௌத்தரம்
விழுங்கி தீர்த்தாள்..
ஆழிப்பேரலை என பொங்கி 
காவு வாங்கியது ...எண்ணற்ற மனிதங்களை ..
Posted by shammi's blog at 8:08 PM 6 comments
Labels: திண்ணை

Monday, March 21, 2011

இரவல் ...


உறைந்து போன கணங்களை ,தேக்கி 
உயிர்ப்பித்து வைத்திருக்கிறது 
அந்த  புகைப்படம் 

இருள் தின்றுத்  துப்பியே 
வயிறு  வளர்த்த நிலா ..
வீசி எறிந்த
இரவல்  வெளிச்சத்தில்  ..

தொலைந்து போன  கணமொன்று 
நிலவொளி பட்டு
மீண்டு வந்ததென
 சமன்பாடாய் 
அந்த புகைப்படம் ....

 வெவ்வேறு 
கோணங்களில் ...
பிரதிகளாகவே ....

Posted by shammi's blog at 8:34 AM 4 comments
Labels: அதீதம், உயிரோசை, யூத்புல் விகடன்

Saturday, March 19, 2011

முரண்பாடு


சிலேடைக் கவிதை 

ஒவ்வொன்றும் 
தப்பிப் பிறந்த தளிர்கள் ...
உயிருக்கும் மெய்க்கும்
இடைப்பட்டு பிரசவித்த 
வலி நிராகரித்த வார்த்தைக் கோலங்கள் ..
இருள் சூழ்ந்து அடர்ந்த 
நினைவுப் பிரள்களுக்குள்
சுற்றி அலையும்  மின்மினிபூச்சிகள் ..
இட்டு நிரப்பிட்ட இடைவெளிகளில் 
சுயம் தொலைத்த சமன்பாடுகள் 
இவைகளுள்  உயிர்ப்பித்தது  
 இருத்தல் தொலைத்த வார்த்தை படிமங்கள் ...

Posted by shammi's blog at 8:55 PM 2 comments
Labels: திண்ணை

Tuesday, March 15, 2011

மூங்கில் நாதம்


காற்று தன் வெளியிடைத் தேட ,
காதல் கட்டியம் கூறியது
 திட்டில் ஓர் ஒதுங்கலாய்
அடர்ந்து விரிந்து ஓர்  மூங்கில் காடு
ராகங்கள் வழிந்தோடியது  ஸ்வரபேதமில்லாமல்
 வண்டுகளுடன் ரீங்காரித்தபடி 
 மூங்கில்  பூக்கள் ...
அருவிகளின் சலசலப்பு
மெலிதாய் முனுமுனுக்க 
இசை பயின்றபடி 
 மூங்கில்கள் ...
வெட்டுக்குட்பட்ட 
கழிகள்
மறப்பதில்லை தன் பாடங்களை
துளைகளால் தூர்க்கபட்டபோதும் 
துரிதமாய் 
புகுந்து புறப்பட்டது  
இசை வெள்ளம் ...

Posted by shammi's blog at 8:36 PM 2 comments
Labels: அதீதம்

Saturday, March 12, 2011

முடிவற்ற பயணம் ...


நிறமற்ற அமானுஷ்ய வெளியில் 
நீந்தி செல்கிறது ஓர் உடலற்ற அருவம் 
திரவமெனவும் , ஜந்து எனவும் 
வரையறுக்க இயலாமல் ....

ஏதோ ஒளி பிரள்கள்
கண்கள் கூசி நிற்க 
உருவாக்கம் எளிதாய் ...

மெல்ல உட் பதிந்து 
பதிப்பித்து ....ஒட்டி நின்று  ஒதுங்கி 
 மெல்ல இருள் தின்று 
உதிரம் குடித்து உயிர் வளர்த்து 
ஓர் மரணக் கதறலோடு ஜனித்தது 
மீண்டும் ஒரு பயணம் ...மீளாமல் 

Posted by shammi's blog at 8:45 PM 5 comments
Labels: திண்ணை

Saturday, March 5, 2011

தன்னிலை



பயம் தன் சாயல்களை,
மற்றும் பரிமாணங்கள் , என யாவையும் 
தூரவே வைத்து இருந்தது 
தொட முடியாத்தொலைவொன்றில் .

எதிர்பார்ப்பின் சாதாரண 
பிரதிபலிப்பு கூட 
சலனங்களை காட்ட முடியாது 
தோல்வி முகம் தழுவியது 

வேஷங்கள்
முகமூடிகள்  ....
என  எவைக்கும் 
தேவை இருக்கவில்லை 

எந்தவித அவசரமோ 
இல்லை ஆர்பாட்டமோ 
எல்லாவற்றையும் துறந்த 
துறவு நிலை 

என்ன ....
 புழுக்கம் மிகுந்து அடைபட்டு கிடக்கையில் 
எல்லோரும் என்னை "பிணம்" என்கிறார்கள் ..
 வீட்டை" கல்லறை "எனவும்...... 

Posted by shammi's blog at 9:08 PM 8 comments
Labels: யூத்புல் விகடன்

Sunday, February 27, 2011

எதோவொன்று



நிழல் ஒன்று அழைத்தது
நிஜம் எனக் கொண்டு ..
அருகினில் செல்ல
பூஞ்சாரல்
பொய்த்துப்  போனது
கானல் நீராக ...


ஒளிகற்றை ஒன்று
சூரியன் எனக் கண்டு
பகல் புலர
இருள் சூழ்ந்தது
கரிய நிழல் விழுங்க

மொட்டொன்று அவிழ
பூவெனக்கண்டு
மகரந்தம் தேடி
வண்டென மயங்கி
உயிர் மாய்த்ததென்ன ?


ஒன்றை
தொலைத்துத்தேடி
தேடித்தொலைத்து
கருப்பொருள் கொண்டு
இருப்பொருள் ஆனதென்ன ?


Posted by shammi's blog at 12:21 AM 5 comments
Labels: திண்ணை

Monday, February 21, 2011

தனித்துப் போன மழை நாள்



நீயே இருந்து  இருக்கிறாய் 
வலியின், ஒவ்வொரு துளி விழிநீரின் 
தாக்கத்திற்கான பின்னணியில் 
சத்தியமாகத் தெரியவில்லை இதுவரை எனக்கு  
நீயே வியாபித்திருந்தது 
என் அனைத்திலுமாக

இருட்டடித்திருந்தன பழைய நினைவுகள்
இருந்தும் காந்த விசை கொண்டு இழுத்திடும்
அவைகளின் நேர்த்தி 
  
மௌனங்கள் போர்வைகளாகின்றனதான் 
நினைக்கவே மனம் சோர்கிறது 
'நாம் பிரிந்து விடலாம்' என உரைத்து
 தனித்து நடந்தாய் குடை விரித்து
 
மீளவுமோர் மழை நாளில்
யாருமற்ற வீதியில் நடக்கிறேன்
பத்திரங்களில் கையெழுத்திட்ட கையோடு
என் கண்ணீருக்கு இணையாக 
மழையும் அழுவதை அறியாயா என்ன ?

Posted by shammi's blog at 5:37 AM 8 comments
Labels: திண்ணை, யூத்புல் விகடன்

Tuesday, February 15, 2011

வாழ்க்கை



 

தேடிக் கலைத்து
மரமொன்றில் தலை சாய்த்து 
இளைப்பாறுகையில்....
மரக்கிளையில் தொக்கி நின்ற 
பழுத்த இலையொன்று
துணையாக அருகில்...
வழி பறித்த பாதைகள் கொண்டு ...
எங்கேயோ இருந்து விழுந்த தேனின் சுவை 
உவர்ப்பு கொண்டு ....
 கண்ணீர் கலந்து இருக்குமோ ?
சிக்கல்கள் விடுவிக்க படாமல் 
சிலந்தி தன் வலையை 
கருத்தாய்ப்பின்னி கொண்டு....

Posted by shammi's blog at 7:47 AM 3 comments
Labels: odagam

Monday, February 14, 2011

ஸ்பரிசம்






வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும்
தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன ...

முதல் துளி ஸ்பரிசம் 
உள்வாங்கிய  பூமியும் 
 இசைக்க மறந்த பாடல்களுமாய்
கொஞ்சம் சிலிர்க்க ...
உயிர்ப்பை தொலைத்திருந்த 
விதை ஒன்றும் துளிர் விட்டது ..
முதல் அரும்பு வெளிவர 
காதல் மழை அதை நனைத்தது 

Posted by shammi's blog at 3:32 AM 3 comments
Labels: திண்ணை

Monday, February 7, 2011

சத்தமில்லா பூகம்பம்


மமதையின் மடிப்புகளில் 
உட்சொருகிய எண்ணங்கள்
முன் பின்னிழுத்தன 

தேக்கியது
உரையாடலில் வீரியம்
வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி 
பகுதிகளாய் பிரித்து 
நிறம் சேர்த்துக் கோர்த்தது

நஞ்சு தோய்த்துச் சிவப்பாய்ச்  சிலவும் 
அமிலம் தோய்த்து  பச்சையாய்ச் சிலவும்

அழகாய் மிளிர்ந்தன 
இனிப்புப் பூச்சுக்கள் அலங்கரித்திட 

நாவின் நாண் பூட்டி ஏவப்பட 
நரம்பு வழி சென்று 
இதயம் தைத்திடும்
ஆயுதங்கள் இவை 

நிகழ்ந்ததோர் சத்தமில்லா 
பூகம்பம் 
Posted by shammi's blog at 8:17 AM 6 comments
Labels: திண்ணை

அவள் அப்படித்தான்




சேகரித்து வைத்துக் கொண்டு
       அமர்ந்திருந்தாள் தெருவோரமாய்
    சிதறிப் போன ஞாபக நட்சத்திரங்களை 

   
        கடை விரித்தாள்
        இருந்தன அமைதியாய்ச் சிலவும்
    இங்கும் அங்கும் பறப்பனவாயும் ...
  
        ஒன்றையெடுத்துத் தனக்கென வைத்தவள்
    தேர்ந்த வியாபாரி போலச் செயல்பட்டதில்
    சாயம் போன, உதிரிக் கனவுகள் கூட விலை போயின
  
        இருள் சூழ்ந்த வேளையொன்றில்
        மேகப் பொதியிலிருந்து நேராக இறங்கிய ஒருவன்
    மெல்லிய சிரிப்பை உதிர்த்தவாறே
         தனக்கென இவள் ஒதுக்கி வைத்திருந்ததைக் கேட்டான்

  
    அனைத்தையும் கொடுத்தாள்
    விலையேதுமில்லாமலே
    அவளிடத்து வாங்கிய பொருள் கொண்டவன்
    அந்தகாரத்துக்குள்ளே மறைந்தே போனான்
  
    மறு தினம் மீண்டும் கடை விரித்தாள்
         தன் அழகிய விழிகளால்
    ஆழமாய்ப் பார்த்தவாறே

    நேற்றைய ஞாபகங்களை 
    இன்றைய விற்பனைப் பொருட்களாக்கி
Posted by shammi's blog at 8:15 AM 0 comments
Labels: காட்சி

வியூகம்



ஓர் சிறு புள்ளி
ஒன்றன் பின் ஒன்றாய்
சுற்றிலும் அதிர் வலைகளின் 
பின்னூட்டங்களில்
அடுக்குகளை தாங்கியே 
சக்கரவியூகம் , அங்கே 
எய்த கல் வட்டங்களை வாரி இறைக்க 
பயந்து பின் ...கேலி பூக்க நின்று நகைத்தன
சிதறியோடிய மீன்கள் ...
உள்ளோடிய கல் எங்கோ சென்று மறைய 
படிகம் ஒன்று பாசி படியத்துவங்கியது ......

Posted by shammi's blog at 8:12 AM 2 comments
Labels: கீற்று

Wednesday, February 2, 2011

வெற்றுத்தாள்கள்




எழுத்துக்கள் தவிர்த்த வார்த்தை என்பது
 எழுதப்படாத கவிதையாக 
சொல்லப்படாத காதலாக 
வரையப்படாத ஓவியமாக  
கிறுக்கல்களாக ....
வெற்று கோடுகளாக 
சில சமயம் வெளியிடப்படாத  உணர்வாக 
தற்கொலை குறிப்பு எழுத எடுத்த 
வெற்றுக்காகிதத்தின் கசங்கல் களாகவும் 
இருந்து இறந்துவிடுவதாக 
அமைந்து விடுவதுமுண்டு ....

Posted by shammi's blog at 1:12 AM 6 comments
Labels: திண்ணை, யூத்புல் விகடன்

Sunday, January 30, 2011

கடற்கரை காதல்



நிலவும் கடலும்
சங்கமித்ததில்
பிறந்து சிரித்தது
வெள்ளிச் சதங்கையென
கடலலைகள் .....

உன் பாதச் சுவடுகளில்
நான் தடம் பதிக்க
நிகழ்ந்தது அக்கினியற்ற
ஹோம வலம்.......

கரைசேரும்
காதல் கட்டுமரம்
என் கனவுகளோடு ......
வாழ்த்தின அலைகள்
வேகமாய் ஒன்றன் பின் ஒன்றாய்.......

உருவம் இல்லாதபடி
நம் காதலும் ,,,,,,,
நுரை தப்பியபடி ......
தனித்து அறியப்படாமல் ........

வலைகளில் சிக்காத மீன்களாய்
ஆழ்கடலில் முத்தெடுப்போம்
என்றும் இணைந்தபடி.....
பிரிவிலும் கூட ,,,,,,,



Posted by shammi's blog at 7:43 PM 5 comments
Labels: திண்ணை

Monday, January 24, 2011

தொலைந்த நான் ...


தொலைத்த என்னைத் தேடிட
அவகாசம் கிட்டவேயில்லை
தொடர்ந்தும் பறக்கிறது காலச் சிறகு

சிற்சில சொல்லாடல்களில்
காணாமல் போன எனதான சாயல்கள்
ஏந்தி  நிற்கும் எதுவுமே
என் போன்றே  தெரிந்திட
அருகில் சென்று ஆராயத் தோன்றும்படி
மனம் ஆர்பாட்டக் ௯ச்சலிடும்

சீ ... நானல்ல இது என  உடன்  சலிக்கும்
வருடங்கள் கடக்கின்றன
தாத்பரியம் என்னவென்று புரியாமல்
வாழ்வியல் கற்றுத் தரா பாடங்கள்

உள்ளுக்குள் தேடல் தீண்ட
தோன்றி விழத் துவங்கின
சுயம் 
கண்ணாடிக் ௯ண்டுக்குள்
கற்களாகி......

Posted by shammi's blog at 5:35 AM 3 comments
Labels: திண்ணை

Monday, January 17, 2011

ஓர் குரல்


எப்போதும் கேட்டுக் கொண்டே
இருக்கிறதோர் குரல்
இரைச்சல்கள் கூடிய சத்தங்களுடன்
ஆங்காரக் கூச்சலிடுகின்றன
நடு நிசிவெளியில்
ஓலங்களென...
விழித்துப் பார்க்கையில்
குப்பைத் தொட்டியைப்
பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்
ஒற்றை வீதியின்
கடைசியில் ஒரு வாங்கில் (பெஞ்சில் )
அந்த குரலுடன் விவாதித்தபடியே
சற்றைக்கெல்லாம் பைத்தியமென
பட்டம் கிடைத்தபொழுதும்
அந்தக் குரல் ஓய்வதாயில்லை
கடைசி கடைசியெனவோர் சவப்பெட்டியில்
அடைந்த பொழுது மட்டுமந்தக் குரல்
மட்டுப்பட்டு தேய்ந்து போனது
என்னுடன் வரக்கூடுமோ
மறுபிறப்பிலும் அக் குரல் மீண்டும் ?

Posted by shammi's blog at 8:34 PM 3 comments
Labels: திண்ணை

Monday, January 10, 2011

கரையில்லா ஓடங்கள்




கனவுகள் தோரணம் கட்டி
இமைகளில்  இறுகப்பூட்டி
விழிகளில் ஒரு ஏக்கம் மேலிட 
ஆங்காங்கே  அவள் அமர்ந்திருப்பாள்

சிறுவயதுக்கனவொன்று 
அவளை இரவுபகலாக வாட்ட
விழி முத்துக்கள் கடலாகின 
உவர்ப்பு நீரதனில் நம்பிக்கை மீன்கள் 
நீந்தி கொண்டு எட்டி பார்த்தது 

மலை எனவும் மடு எனவும் 
இலட்சியங்கள், நம்பிக்கைகள்  வகை பிரித்தாள்
நிலந்தனில் படர விட்டால் 
மிதிபடும் என 
ஆழ்கடலில் புதைத்து வைக்கிறாள் 

கனவுக்காலம் வரும் பொழுது 
மீட்டு கொள்ளவென ....
காலம் என்றும்
 அவள் கனவுகளில் மட்டும் தான்
எப்படி  அவள் மறந்தாள்? 
 அவள் ஓடங்களுக்கு தான்  கரைகள் இல்லையே  .... 

Posted by shammi's blog at 7:52 AM 2 comments
Labels: திண்ணை

Sunday, January 2, 2011

சாயல்கள்


வார்த்தைகள் எங்கும் பரவி கிடக்கின்றன
தடங்கலின்றிப்  பேசவோ ,
எழுதவோ நினைக்கையில் 
அவை சிக்குவதேயில்லை ....
ரசிப்பாகட்டும் , லையிப்பாகட்டும் 
வார்த்தைகளைச்  சரிவர கோர்க்க 
என்றுமே  இயல்வதில்லை  ....
மீறி எத்தனிக்கையில் அவை 
ஓவியப் பலகையில் 
கோடுகளாகவோ அல்லது
வர்ண தெளிப்புகளாகவோ 
வெறும்சாயல்கள் மட்டும் தாங்கியே 
நின்று விடுகின்றன ...

Posted by shammi's blog at 7:05 PM 6 comments
Labels: திண்ணை

Sunday, December 26, 2010

விபரீதகரணி



அவர்களின் தலைகளில் கால்கள்
முளைத்திருந்தன ....
இறகுகளில் சிலவற்றின் மென்மையோடு
காற்றின் திசையில் பறப்பனவாய்
மேலும் கீழும் அசைந்தபடி
வானுக்கும் பூமிக்குமான பயணம்
கழிகளின் மேல் ஒரு அனாயச நர்த்தனம்
மரணத்தின் விளிம்பு தொடும்
பயமேதுமில்லாப் பயணம்
காற்றின் திசைகளோடும்
கோல்களோடும்
போரிட்டு நிலைநாட்டும் ஆர்வம்
ஆகாயத்தின் அலசல்கள் முற்றுப் பெற்று
தரை தொடுகையில்
தொடரும் கேள்விகளின்
தாக்கச் சுமை மனதை அழுத்திட
ஊமையாய் எஞ்சும் கேவல்கள் ....

Posted by shammi's blog at 10:37 PM 7 comments
Labels: திண்ணை

Sunday, December 19, 2010

மௌனம்


மனதோடு மௌனம்
பழக்கிப்பார்க்கிறேன்
இருந்தும் முரண்டியது
மரணக்கூச்சல் ....

சொடுக்கும் விரல் இடுக்கில்
தப்பித் தெறிக்கும்
ஓசை , ..சொல்லாமல்
மௌனம் கலைக்கும்

சுயம் அடிபடும் வேளைகளில்
ரௌத்தரம் பழகவில்லை
நான் ...
மௌனம் பழக்கிக்கொள்கிறேன்

வெளியிட விரும்பா வார்த்தைகளை
நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன்
ஓசைகள்
ஓங்கி ஒலிக்கும் நேரம்
என் மௌனங்கள் அவற்றை
இரை கொள்ளும் .....
எக்காளமிடும் பார்வைகள்
அனல் தெறிக்கும் வார்த்தைகள்
என அனைத்து முயற்சிகளுக்கும்
மௌனமே உரையானது ...

இனி உன் வார்த்தைகளை
நீயே புசி..
அவற்றின் மரணக்கூச்சல்கள்
துணை கொண்டு ....
நான் மௌனப் போர்வையில்
குளிர் காய்கிறேன் ....

Posted by shammi's blog at 10:12 PM 5 comments
Labels: திண்ணை

Monday, December 13, 2010

துடித்தலும் துவள்தலும்



எழுத்துக்களால்
இட்டு நிரப்பிட இயலாத

இடைவெளியில்
உன் பெயர் மட்டுமே
 கடவுச் சொல் .....

வெளித் தள்ளிய முத்தின் 

பேரெழிலை உணர்ந்திடாமல்
கீறல்களில் முகம் பார்த்திடும்

கிளிஞ்சல்கள்....


துடிப்பின் துள்ளல்
தெரிந்தும்,
 மீன் பிடிக்கும்
மீன்கொத்தி ....


நிலைகள் பலவாகினும்
துடித்தலும் துவள்தலும்
 அனைத்திலும் ஒருங்கே .....

நன்றி 

திண்ணை ...
Posted by shammi's blog at 7:43 AM 1 comments
Labels: திண்ணை

Sunday, December 5, 2010

எண்ணப்பிழை ..


இருள் கூட்டி, ஒன்று சேர்ந்தது 
வக்கரித்து கொண்டன பார்வைகள் ..
நடப்பு திசை மாற
அவள் ,அவன் 
என கோணங்கள் வெவ்வேறு ஆகின 
காற்றும் புக முடியா வெளி என 
இறுகிப்  போனது  மனம் 
நூலிழை வெளிச்சம் உயிர் கரைக்க 
காற்றுடன் வழிந்தோடியது ..
ஒரு புன்னகை
 விலை? ..
அவன் காதல் ...
ஜாக்கரதை!!!
மீண்டும் ஒரு எண்ணப்பிழை ..
எளிதாய் கருத்தரிக்க கூடும் ...

நன்றி 
திண்ணை 
Posted by shammi's blog at 5:16 AM 2 comments
Labels: திண்ணை

Monday, November 29, 2010

முகமூடி!


முகம் உருக
உள்ளுக்குள் வெறும் ரத்தமும் சதையும்
நாளங்களோடு
அழுகல் வாடை ........
விதவித சாயங்கள் ....
சில நேரம் பச்சையாய் ....
சில நேரம் சிவப்பாய்.....
நேரத்திற்கு ஒன்றாய்
நிறம் மாறும் உறவுகள் .....
வயோதிகத்தின் இறப்பை
ஜீரணம் செய்ய மறுக்கும்
வாழ்வியல் பிரயத்தனம் .....
ஓரங்க நாடகம்
அரங்கேறியது ....
பங்கு பெறுவோருக்கு கூலி ....
பங்கிட்டுச் செல்லும்
எண்ணமற்ற சுயநலத்தோடு
திசைக்கொன்றாய் பறவைகள் கூட்டம்
வித வித தேடல்களோடு
இரை கிடைத்ததும்
பறந்திடும் யோசனையில்
நன்றி 
திண்ணை ....
Posted by shammi's blog at 7:11 AM 6 comments
Labels: திண்ணை

Monday, November 22, 2010

விடியாக்கனவு ... !


நினைவுகளின் பொதி  சுமந்தவள்
மேகப்பொதிகளின் கூட்டத்தினிடையே 
நடந்து வருகிறாள் ...
கனவுகளின் சாயல் கொண்டு 
கனம் தாங்கா
நடையிலோர் தள்ளாட்டம் 
மழைகளின் சாரல்களில் சில 
சோக மூட்டைகளை இறக்கி வைத்தாள் 
அவைகளின் பாரத்தில் 
நிலம் தன் சரிவை  கூட்டியது
மனிதர்களை விழுங்கியும் 
கோர பசி தணிய மறுத்தது அவற்றின்

பயந்து போனவள் 
மெல்ல மீண்டும் தன் பாரம் சுமந்து 
நிலந்தனில் இறக்கி விட்டாள்
சில அமிர்தமாயும் சில ஆலகால விஷமாயும் 

அமிர்தத்திற்கு அடித்துக் கொண்டதில் 
ஆலகால விஷமும் அதில் கலந்தது 
சர்ப்பம் என இரு நாக்கு நீட்டி 
விழுங்க எத்தனித்த படி 

சிக்கிய வார்த்தைகள் அவளின் 
கனவுகள் ஆகிட
மயங்கிச் சாய்ந்தவளை 
அகோர பசி கொண்ட நாகங்கள் 
நாவுகளைச் சுழற்றிய படி விழுங்கின


Posted by shammi's blog at 7:09 AM 3 comments
Labels: உயிரோசை, திண்ணை

Monday, November 15, 2010

முள் பயணத்தினிடையே


முடிவற்றுத் தொடர்கின்றது
போடப்பட்ட பாதைகள் வழியே
முற்களாலானதோர் பயணம்
களையக் களைய
வளர்ந்து கொண்டே வருகின்றன
முற்கள்
கீறல்கள் வழியே பீறிடுகிறது குருதி
வழித் தடமெங்கிலும்
கெஞ்சிச் சலிக்கின்றன
நொந்திடும் பாதங்கள்
இளைப்பாறிட நிற்கையில்
வலி தாளாமல் கதறுகையில்தான்
மீண்டும் மீண்டும் அடிக்கின்றது காலம்
கூரிய முற் சாட்டை கொண்டு
ஆதரவேதுமின்றியே
தொடந்திடும் பயணங்களிடையே
முட்கள் மட்டுமேன் செழித்து வளர்கின்றன
என் சுவடுகளில் மட்டும்

நன்றி 

திண்ணை 
Posted by shammi's blog at 11:26 PM 1 comments
Labels: திண்ணை

Friday, November 12, 2010

ஐந்தறிவு பார்வை!


நெல்லி மர உச்சியிலும்
எதிர் சாரி ஜன்னலிலும்
பரிச்சயமானோம்
சங்கேதங்களும்
பார்வைகள் மட்டுமே
நம் பாஷைகளாய்..
சோறூட்டும் வேளைகளில்
தவறாமல் சந்தித்தோம்
பரஸ்பரம் வேடிக்கை காட்டுவதற்கு..
மெல்ல இறுகியது நட்பு..
மரத்தை வீழ்த்த
கோடரியோடு ஆட்கள் வந்த
ஒரு நாள்..
மௌனமாய் வேடிக்கைப் பார்த்தேன்
செய்வதறியாது..
கிடைத்த அவகாசத்தில்
உன் குஞ்சுகளை இடமாற்றம் செய்தாய்..
நடுவே.. ஏறிட்டு
ஒரு பார்வை பார்த்தாய்
அதில் -
அத்தனை அர்த்தங்கள்....

நன்றி 

திண்ணை 

Posted by shammi's blog at 5:32 AM 6 comments
Labels: திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ▼  2021 (1)
    • ▼  December (1)
      • மீள்தல் சுகம்
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio