skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Thursday, September 29, 2011

எங்கிலும் இருக்கும் அவன்




வழக்கொழிந்த வார்த்தைகளினூடே 
தர்க்கப்போர் துவக்குகிறான் அவன் 
சமயத்தில் அடர் ஆழம் வரை 
செங்குத்தாய் சென்று 
இருள்சூழ் பாதாளங்களிடையே 
தேங்கிக்கிடக்கின்றன அவ்வார்த்தைகள் 

செவ்வகச்சட்டம் கொண்டு
சதுரித்த முகப்புகள் கொண்டு 
சீந்துவாரற்றுத் தனித்துக் கிடக்கிறது  
சபிக்கப்பட்ட அக்கோப்பை 

பேராவல் மண்டிட கரத்தினில் எடுத்தவன் 
இதுகாறும் சேர்த்தெடுத்த இரத்தத்துளிகளை 
அவற்றில் ஊற்றுகிறான் 

அக்கோப்பைகள் நிரம்பியதும் 
எக்காளமிடுகின்றன சிவப்பாய்.
அவற்றின் கூச்சல்களும் சப்தங்களும்
எங்கோ தூர்ந்து போன ரவைகளின்
வடுக்களில் மிச்சமிருக்கும்
ரத்த நாளங்களின் வீச்சம் தாங்கியே இருந்தன

"சாத்தான் "..."ரத்தகாட்டேறி"...."பிசாசு "
எனப்பெயர்களிட்டு  அழைத்தாலும் ...
மனிதருள் மனிதராய் 
மறைந்தே இருக்கிறான் அவன் ...

"சமரசங்கள் " எனப்படும் 
சந்தர்ப்பவாதிகள் கூடம்
அவனுக்கே "ஆகுதி "..

எங்கோ தொலைவில் இருக்கும் தேவாலயத்தின் 
மணித்தியாலப் பிரார்த்தனை இனி 
" பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே ..
இப்பூலோகத்தில் இருக்கும் மனித உருக்கொண்ட ராட்சதனிடமிருந்து எம்மை காத்து இரட்சிப்பீர் "
என மட்டுமே இருக்கக்  கூடும் 

Posted by shammi's blog at 6:28 AM 1 comments
Labels: உயிரோசை

காட்சிகள்

இருட்டு குடைபிடித்த 
 வெளிச்சத்தை 
உமிழ்கிறது 
நிழல்.... 
வட்டவட்டமாக ..

அவளின் வியர்வை 
மழை நனைத்த 
கூந்தலில் சொட்டு கின்றது 
நட்சத்திர பூக்கள் 


பெய்த  மழையில் 
வெளிச்சத்தை சேகரித்து 
தெளித்து எழுந்தது 
வானவில் கோலங்கள்...

வர்ணம் உதிர்த்து 
பறந்தது அந்த 
பால் நிற பட்டாம்பூச்சி 
அங்கொன்று இங்கொன்றுமாய் 
பச்சையும் சிவப்பும் ...



http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4819

Posted by shammi's blog at 6:27 AM 0 comments
Labels: உயிரோசை

Tuesday, September 6, 2011

அவன் ...அவள் ..அது ..




அவன் 
ஏதோ ஓர் அடர்வண்ணம்
நிரப்பியே அவன் எழுதுகிறான்
பலசமயம் அவை புரிவதாயில்லை ..
எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று
முரண்பட்டும்  ஒட்டிக்கொண்டும்
கையெழுத்து வேண்டாம் என
மசிநிறைத்த தட்டச்சு இயந்தரத்தில்
பிரதி எடுக்கிறான் அப்போதும்
அவன் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்றாய்
அப்பிக்கொள்கின்றன
அவள் ..
எழுதிய வார்த்தைகளினூடே
கூறா மொழிகளையும்
சேர்த்தே படிக்கிறாள் ..
விழிகளின் மொழிகளை
இளவர்ணங்களில் தோய்த்தெடுத்து
அறைகளின் சுவர்களில் பூசி வைக்கிறாள்
ஒட்டிக்கொண்ட வார்த்தைகள்
அழகாய் தனித்து தெரிந்தன
அடர் நிறமாய் ...
அது ...
சிரித்துக் கொண்டிருந்தது
அது ...
இவனுக்கும்
அவளுக்கும் இடையே ...
சிக்கல்களின் துவக்கம் ...
தொடக்கங்கள் வாதித்து
பின்னூட்டங்கள்  கொடுக்கையில்
கசப்புகள் வெளிவரத்துவங்கின ....
வெளிறிப்போன நிறமிகளின்
அடர் வர்னமென ...
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4745

http://puthu.thinnai.com/?p=3923
Posted by shammi's blog at 12:30 AM 2 comments
Labels: உயிரோசை, திண்ணை

Friday, August 19, 2011

நீ யார்???




கண்ணாடி முன் நிற்கையில்
என்னை விழுங்குகிறாய் 
பிம்பமாய் விழுந்திடும்
உன்னை மறைக்கும்
நீ யார் ?
என்ன உன் பெயர் ?
ஏன் வருகிறாய் என்னுடனேயே?

விவாதிக்கையில்  என்றுமே 
எதிர் சாட்சியம் சொல்லும் நீ
சரியெனவும் தவறெனவும் 
சிக்கல்களுண்டாக்கி 
அவிழா முடிச்சுக்கள் கோர்த்து 
குற்றமாலை வாசிக்கிறாய்
சரி சரி இனி இப்படி இருக்காதே 
எனப் பிடி தளர்த்துகிறாய்
சிலந்திகள் கோர்த்துவிட்ட 
பின்னலாடையென இறுகி 
மூச்சறுந்து போகும் வேளையில் 


விட்டு விட்டு சுவாசம் தவிர்க்கிறாய் ..
மெல்ல மெல்ல சிக்க வைத்து 
விடுவித்து ஆவி விடுத்து மூச்சு பிரிகையில் 
மட்டுமேன் சட்டையாய் அவிழ்கிறாய்???
Posted by shammi's blog at 9:22 PM 4 comments
Labels: உயிரோசை

Sunday, August 14, 2011

எங்கோ தொலைந்த அவள் . ..


யன்னல்கள் ஏதுமற்றிருந்த 
அந்த ஒற்றையறையின் கதவுகள் 
சாத்தப்பட்டே இருந்தன 

எப்போதும் அலறல்களும் 
கூச்சல்களும் அங்கே 
கசிய விடப்பட்டிருக்கும் 

ஒலித்துகள்கள் ஒவ்வொரு 
அணுவிலும் ஏற்றப்பட்ட 
உடல் அதிரத்துவங்கும்

மௌனமான நேரங்களில் கூட 
செவிகளில் ரீங்காரமிடும்
அந்த அழுகையின் ஒலி
 
அவளிலிருந்து
அந்த அறைக்கு 
விடுதலை தந்தது 
ஒர் மரணம்

மீண்டும் பூட்டப்பட்ட
அந்த அறைக்குள் 
அவள் தனித்து
கூச்சல்களும் அலறல்களும் 
அழுகைகளும் 
மீண்டு வரமுடியாத் தொலைவொன்றில் ..
http://puthu.thinnai.com/?p=3239


Posted by shammi's blog at 10:05 PM 10 comments
Labels: திண்ணை

Tuesday, August 2, 2011

கனா தேசத்துக்காரி


கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள்
என்றுமே தனித்திருந்தாள்
அம் மாய உலகில் தனக்கெனவோர்
அரியாசனம் அமைத்தவள்
பிரஜைகளையும் உருவாக்கினாள்

அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர்
அதில் அனைவரும்
பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள்
அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள்
வெளிர் நிறங்கள் தாங்கிய
போர்க்கொடியும் ஏற்றப்படுவதேயில்லை


மனதின் நீரூற்றுகள்  பல வண்ணங்களில்
வாரி இறைத்தபடியிருந்தன
தனக்கென ஓர் குணத்தைக் கொண்டுமிருந்தன
ஒவ்வொரு நிறமும்
கோரமாய்  குணம் கொண்ட
வல்லூறொன்றின்  பார்வையில் சிக்கின அவள் கனவுகள் இறுதியில்
நனைந்த கோழிக் குஞ்சொன்றாய்
தப்பும் எண்ணம் ஏதுமற்றுப்
பலியானது மௌனமாய்...
கனாக் காண்பதேயில்லை இப்போதெல்லாம் அவள் ..

Posted by shammi's blog at 9:35 AM 3 comments
Labels: திண்ணை

அவன் ஆனவன்




பெயர்களேதுமற்றே 
உருவாகிறான்
இருளின் சுவடுகளில் 
அடையாளமின்றித் திரிந்து 
காற்றினூடு சஞ்சரிப்பவனுக்கு
இப்பொழுதும், எப்பொழுதும் 
கொடுக்கப்படவேயில்லை
பெயர்களேதும் 

அன்னியர்களையும் ஈர்ப்பதே செயலாகியவன்இருளின் சப்தம் நிரம்பிய
அறையின் கதவுகளிடையே 
முனகிக் கொண்டிருந்தான் 

பதிப்பிக்க முயன்று பின் 
கையெழுத்துப் பிரதியுடன் 
நின்று போனது
என்னில் அவனது வார்த்தைகள் 



தொடர்வதிலேயே தொடர்ந்து 
நின்று விடும்
எங்கள் இறுதிச் சந்திப்பு என்றும் 
வரையறுக்கப்படுவதே இல்லை 


அந்திம வேளைகளிலும்
வார்த்தைகளைத் துப்பி

கவிதை செய்தே 
என்னை துரத்துகிறான்  

வெற்றுக் கோப்பைகளை  நிறைக்கும் நீரினைப் போல 
நுரைத்துப்  புறப்பட்டு
வர்ணஜால வார்த்தைகளில் ஈர்த்து 
இறுதியில் அடங்குகிறான் 
பெயரேதுமற்றவன்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4604
Posted by shammi's blog at 9:34 AM 3 comments
Labels: உயிரோசை

Thursday, July 28, 2011

வேற்றுகிரக வாசிகள்



அது  என்னையொத்தே இருந்தது
சலனங்களற்ற வெற்று வெளி
வெறித்தவாறே பார்வைகள்

தனித்த ஒன்று
இருப்பதாகவே தெரியவில்லை
இருந்தது அதன்  உயிர்ப்பு
என்னில் கலந்து உள்ளோடுவதாகவே
கை, கால் என உறுப்புகள் ஏதுமில்லை
ஆயினும்
ஒரே திசையில் பயணித்துக் கொண்ட எண்ணவோட்டங்கள்

ஈருயிர்களிலோர் பயணம்
அனைத்து உறுப்புக்களும் ஒத்திருந்தது பூகோள உருண்டையை
குருதிக்குப் பதில் ஒயர்கள் அதில்
ஏதோவோர் எலக்ட்ரோனிக் சாதனம் போல

என்றபோதிலும் இறந்துகொண்டிருந்த என்னிடம் நின்று
சில நொடிகள் மௌனிக்கக் கூடிய
மனிதம் மிச்சமிருந்தது ...

இவர்கள் வேற்றுகிரக வாசிகள் 

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4589
Posted by shammi's blog at 1:09 AM 0 comments
Labels: உயிரோசை

Saturday, July 16, 2011

கரியமிலப்பூக்கள்

அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை 
கொண்டவையாகவே இருந்து விடுகின்றன
சில நிஜங்கள் 

மறுக்கப்படுகிறது
இனிப்பின் இயல்பு மறந்தும் கூட

இறுக்கப்பட்ட மன  இயந்திரத்தின்
அழுத்தக்  கோட்பாடுகள் 
வேகமேற்று ..

அனல்வாயின் கொதிக்கும் 
தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள்
மலர்ந்து விடுகின்றன 
நட்சதிரப்பூக்களாய் ...

சூடு தணிக்கும் பணியென 
தண்ணீர் ஊற்றப்படுகையில் 
குளிர்ந்தும் இறுகியும்
கிடந்தன
கரியமிலப்பூக்கள் 
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fputhu.thinnai.com%2F%3Fp%3D2415&h=KAQA0W6py


Posted by shammi's blog at 9:03 PM 1 comments
Labels: திண்ணை

Thursday, July 14, 2011

அவள் ....

கருநிற மேகமொன்று சற்று 
வெளிறிப் போயிருந்தது 
அவளது பார்வை
கலைந்து போனதில் நிலைத்து
மேகத்திரையில்
காற்றின் அலைகள் 
பிய்த்து போட்டன
கற்பனைகளை 
மீண்டும் 
ஒன்று கூடிற்று 
கலைந்து போனவை
பார்வையின் உஷ்ணம் 
தாங்காது 

கோர்த்து வைத்தவை 
காணாமல் போக 
கண்ணீர் வடித்தது வானம் ,
அவள் பார்வையில் பட்டபடி 

இடியாகவும் 
மின்னலாகவும்
உருமாற்றம் பெற்றன 
குரோதம் கொப்பளித்த கணங்கள் 
சலனங்கள் ஏதுமற்று 
மீண்டும் மீண்டும் வெறித்தபடி
பார்த்துக் கொண்டேயிருக்கின்றன 
அவளிரு விழிகள்

Posted by shammi's blog at 8:43 AM 0 comments
Labels: திண்ணை

Thursday, July 7, 2011

குயவனின் மண் பாண்டம்

சுற்றி வரும் சக்கரத்தின் 
மையப்புள்ளியில் வீற்றிருக்கிறேன் நான்
சற்றுப் பதமாகவும் கொஞ்சம் இருகலாகவும் 
எந்த உருவமுமற்றதோர் நிலையில் 
ஏகாந்தம் துணையாய்க் கொண்டு 

சற்றுப் பொறுத்து வந்த
ஓர் முழு  வட்ட சுழற்சியில்
மெல்ல நிலை பிறழா வண்ணம் 
எழுந்து ஓரமாய்ச் சாய்கிறேன்..
அருகிலேயே வளைந்து நெளிந்து 
சற்றே அகன்றபடி
சாய்மானமாக ...
வியாபித்தே இருக்கிறேன்
கொஞ்சம் பொறுத்தே அப்புறப்படுத்தப்பட்ட 
அப் பாண்டத்தின் எங்கோவோர் மூலையில் 
"நான்" கரைந்தோ...
இல்லை முற்றிலுமோ ...
 ....

முற்றிலுமாக
 அழித்து போவேனா 
நான் ?
இம் முறையாகிலும் உடைக்கப்படும்போது 
 
http://puthu.thinnai.com/?p=2112
 


Posted by shammi's blog at 9:08 PM 2 comments
Labels: திண்ணை

Saturday, June 25, 2011

வினா ....




இருளை உள்ளடக்கியே 
பரவிக்கொண்டிருக்கின்றன
வெளிச்சக் கீற்றுக்கள் 

எங்கும் துளை போட இயலாமல் 
காற்றுவெளியில் இறுகி 
கோளங்களாய் உருண்டு 
வீசப்படாத எரிபந்துகளாய் 
அந்தக் கோள்கள்...

வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ
திசை எங்கிலும் விரவிக்  கொண்டே 
தனித்தொரு பாதையமைத்து 
எதிலும் படாமல் விலகியே செல்லும் 

என்றும் விடை தெரிவதே இல்லை
சில கேள்விகளுக்கு  மட்டும்

Posted by shammi's blog at 8:55 PM 1 comments
Labels: திண்ணை

Friday, June 24, 2011

முதுகெலும்பா விவசாயம் ?



நல்லா செழித்து வளர்ந்துடுச்சு 
இந்தத் தலவாசல் வேப்ப மரம் ..
போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு 
இது தான் போக்கிடம் 
எனக்கும் மேக்காலவளவு  குப்புசாமிக்கும் ...
மோட்டுவளைய பாத்துகிட்டு 
எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ?
ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம் 
வூடு தாவாரம் இறங்கிப்  போச்சு ..
இனி  ஓடு மேஞ்சென்ன ஆகப் போகுது ?


அந்த தாழ்வாரத்துல 
கொறஞ்சது எழுவது பேர்
உக்காந்து சாப்பிட்டது
கண்ணுக்குள்ள நெனப்பா வருது
இருவத்தஞ்சு படி அரிசி போட்டு மாவிடிச்சு 
திருமங்கலத்து அத்தை வீடு
புத்தூர் சித்தி வீடு 
இப்டி சொந்தக்காரவுக  வூட்டுக்கெல்லாம்  கொண்டு போயி
பத்துப் பன்னெண்டு நாள் இருந்து வாரது
எல்லாம் இப்போ இல்ல 

வீடு நெறஞ்சு மனசு நெறஞ்சதெல்லாம் 
இனி வரப்போறதில்ல 
பட்டணம் போயிப் புள்ளைங்க படிக்க ஆரம்பிச்சு 
வேலைக்கும் போய்ட்டாங்க ....
அவிங்களுக்கும் பாவம் பொழுது சரியாத்தான் போகுது 
வார போற நாளும் வேகமா ஓடுது 
இதுல சொந்தம், பந்தம்  என்ன தெரியப் போகுது ?
இப்போதைக்கு இந்த ஊர்ல மிஞ்சியிருக்கிறது 
கெழக்குவளவு சபாபதியும்,
மேக்காலவளவு  குப்புசாமியும் நானும் தான் 
எங்களுக்கப்றம் 
இந்த ஊர்ல விவசாயம்  என்ன ஆகும் ?

மண்ணாப் போன நடுவளவு தான் 
நெனப்புல வருது ஆமா

இந்தியாவோட  முதுகெலும்பு , கிராமம் 
விவசாயம்னு சொல்ற ராசாங்க,
இது என்ன கணக்கு அப்பு ? 
Posted by shammi's blog at 10:49 AM 2 comments
Labels: திண்ணை, யூத்புல் விகடன்

Saturday, June 11, 2011

நிழலின் படங்கள்

எங்கிருந்தோ கூவுகிறது
தனித்த அந்திமப்பறவை ஒன்று
அலறல்களடக்கி
மெல்லிய  அனத்தல்கள்
மட்டுமே கூவல்களாக
அதன் சப்தங்கள் நடுநிசியில்
உயிரில் பாய்ந்து ஊடுருவி
சிலிர்த்து எழும்பின ரோமகால்கள்

சொந்தங்களையிழந்த தாக்கம்
என்றோ தொட்டுச் சென்ற
மிச்சமிருக்கும் ரவையின் வடு ..
ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம்
ரத்தசகதியில் கிடந்த
அப்பாவின் சடலம்
கோரமாய் சிதைக்கப்பட்ட
தம்பியின் முகம்
அராஜகத்தின் எல்லைகளில்
தீவிரவாதம்
எல்லாம் ஒருங்கே தோன்ற

தொலைத்த சுவடுகளில்
பாதம் பதித்து  மீண்டும்
எழுந்தன மூடி வைத்த
நிழற்படங்கள்
Posted by shammi's blog at 9:13 PM 3 comments
Labels: திண்ணை

Tuesday, June 7, 2011

மௌனம்

மனதோடு மௌனம் 
பழக்கி பார்க்கிறேன் 
இருந்தும் முரண்டியது 
மரண கூச்சல் ....

சொடுக்கும் விரல் இடுக்கில் 
தப்பி தெறிக்கும் 
ஓசை , ..சொல்லாமல் 
மௌனம் கலைக்கும் 
அழைப்பிதழ்...

சுயம் அடிபடும் வேளைகளில் 
ரௌதரம் பழகவில்லை 
மௌனம் பழக்கி கொள்கிறேன் 
 வெளியிட விரும்பா வார்த்தைகளை 
நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன் 

ஓசைகள் ஓங்கி ஒலிக்கும் போது 
மௌனங்கள் மெல்ல 
இரை கொள்ளும் .....

எக்காளமிடும் பார்வைகள் ,
அனல் தெறிக்கும் வார்த்தைகள், 
 அனைத்து முயற்சிகளுக்கும் 
 மௌனமே உரையானது ...

 வார்த்தைகளை 
நீயே புசி..
அவற்றின் மரண கூச்சல்கள் 
துணை கொண்டு ....
நானோ  மௌன போர்வையில் 
குளிர் காய்கிறேன் ....
http://puthu.thinnai.com/?p=963
Posted by shammi's blog at 9:32 PM 0 comments
Labels: திண்ணை

அரங்கேற்றும் விந்தையின் கவிதை



அவைகள் கதிர்களாகவே
ஊடுருவுகின்றன
அனைத்தையும் தாண்டி

பிரபஞ்ச வெளிகளின் 
ஓர் பகுதி உள்ளில் செலுத்தப்படுகின்றன
மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்

ஊர்ந்து செல்லும் அம் மனச் சாய்கதிரை
ஓர் மையப் புள்ளியில் அமைதியாகிறது

பிரார்த்தனையின்  கடைசிப் பத்தியை
படித்து முடித்த பின்னெழும்
ஏகாந்த அமைதியை ஒத்தே
செயற்கையின் ஒளித் தடங்களில் ஓர் இயற்கை 
அரங்கேற்றும் விந்தையின் கவிதை ...

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=4398
Posted by shammi's blog at 9:31 PM 1 comments
Labels: உயிரோசை

Wednesday, June 1, 2011

திரைமறைவு நாடகம்

எங்கேயோ திரை மறைவில்
நடக்கிறது நாடகம்
அறிந்தோ அறியாமலோ

ஒவ்வொரு பாத்திரப்படைப்பும்
ஒன்றை மிகைப்படுத்தியவாறு
எல்லாவற்றிலும் ஒரு நிழல் யுத்தம்

சாதகப்பறவை ஒன்று
மழைநீர் தேடியபடி
பறந்து திரிந்தது அல்லோகலப்பட்டது
நிழல் நீர் அருந்த பிடிக்காமல்
உயிர் விட்டது

மரப்பாச்சி பொம்மையோ
அடுத்த கொலுவிற்கு தயார் ஆகியது

எங்கோ ஓர் குயில் கூவத் துடித்தபடி ஊமையானது
பின்புலமாய் ஆந்தைகள் ஓலம்
ஆவேசமாய் அரங்கேறியது

பொய்மைகள் ஒன்றுக்கூட்டி
மெய்யிற்கு தளைப்பூட்டியது
இப்போதோ மெய்யும் பொய்யும்
இரண்டறக்கலந்து...
Posted by shammi's blog at 2:45 AM 0 comments
Labels: வல்லினம்

Sunday, May 29, 2011

இருள் போர்வையின் முடுச்சுக்கள்

இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி
சிக்கலாகுகையில்
சுவாசமோர் விசையில்
மென்காற்றாகவோ புயல்மழையாகவோ
ஏன் பெருமூச்சாகவும்
இருத்தல் கூடும் .

ஒரு கயிற்றின் வழியில்
இரு முனைகளாக வழிந்தோடுமவை
வெவ்வேறு கோணங்கள் தீண்டி
ஒரு மையப்புள்ளியில் ஒன்றுபட
இரு எல்லைகளில் உருட்டப்பட்ட புள்ளிகளாக
மீளவும் சிக்கல்கள்
பிரிக்கப்படாமல்
அவள்
மற்றும்
அவன் ….

http://puthu.thinnai.com/?p=635
Posted by shammi's blog at 8:12 PM 0 comments
Labels: திண்ணை

தக திமி தா


பொய்மைகள் திரை கட்டி
உடல் மறைத்த கூடு
சட்டமிட்ட மனமெனும்
பெட்டியினுள் ஓர் உக்கிர நடனம்
ஊழித்தாண்டவம்
தீப்பொறி கிளப்ப
உணர்வுகள் கொண்டு தீட்டிய
கூரிய போர்வாள்
சிறிதும் அயர்வின்றி சுழற்றப்பட
இரத்தக்களரியானது நெஞ்சம் முழுவதும்
காயங்கள் வெளித் தெரியாதிருக்க
உலர்ந்து வறண்ட உதடுகளில்
புன்னகை சாயம்
அதிலும் தெறிக்கும் சிவப்பாய்
குருதி வர்ணம்
அனல்களில் ஆகுதி கொடுக்கப்பட
சாம்பலானது பிண்டமெனும்
மெய்
http://puthu.thinnai.com/?p=639


Posted by shammi's blog at 8:01 PM 0 comments
Labels: திண்ணை

Wednesday, May 25, 2011

கருமையின் படிமானம்


இலைகளின் நுனியோர பனித்துளி 
உணர்ந்தே ஒளி வீச
ஒரு கீற்று எழுப்பும் ஒளிகளினுடே
இருளின் கருமை படிந்தே  இருக்கும் 

மேகக் கூடத்தில் வெள்ளையாய் 
முயல், கரடி என உருவகங்கள் செய்து
தன்னிச்சையாய் செயற்படும் 
ஒன்றுமற்ற வெற்று வெளியில் 
கருமை சூழ வெறித்து இருக்கும் 
பார்வை 

காகிதக் கூழ் பதுமையாய் 
ஒட்டலின்றி விலகி 
தனித்து நின்றாடுதோர் 
தலையாட்டி பொம்மை 
அச்சுக் கருமை விலகாமல் 

http://kaattchi.blogspot.com/2011/05/blog-post_26.html
Posted by shammi's blog at 11:03 PM 1 comments
Labels: காட்சி

Sunday, May 22, 2011

தொடரும் கவிதைகள்



நீ விலகி செல்லும் போது  
காகிதத்தில் 
பதிந்தது சிவப்பு வர்ணத்தில் 
எழுதிய கவிதை ஒன்று 
ரத்தம் அதன் நிறமா அல்லது 
உணர்வா என பிரித்து கூற  இயலாது ...

எனதான உன் காலங்களில் 
இளவேனில் அதிகம் இருந்தது 
எங்கிலும் பசுமை நிறைந்தால் 
புனையப்பட்டவை 
இளம் பச்சை நிறம் கோர்த்து இருந்தன

மயங்கும் மாலையில் 
கடலோரம் பேசிய முத்துக்கள் 
கூட இளமஞ்சள் சேர்த்து விழுந்தன ..

 கோபம் கொண்ட கணங்கள் 
கருமை புசியதாகவும் 
கடும் குளிரின் தாக்கம் ௯ட்டுபவை 
அனைத்திலும் தனித்து தெரிபவை 
குரோதம்  கொப்பளிக்கும் வார்த்தைகள் 

அமைதியை நிலைநாட்ட 
புறப்பட்ட கவிதைகள் 
வெள்ளை நிறம் அல்லால்
 வேறு என்ன இருக்க முடியும் ?

வார்த்தைகளில் வர்ணஜால
 கவிதை வடிக்கும் நீ
 மற்றும் ஒரு வண்ணம் தேடி கவிதை செதுக்ககூடும் 
அது  கருமை தேடும் 
 ஒரு இறங்கர்பாவாக இருக்க வேண்டாம் ...

Posted by shammi's blog at 3:58 AM 5 comments

Monday, May 16, 2011

சிதறல்



தேடுதல் எளிதாக இல்லை
தொலைத்த நானும்
தொலைந்து போன நீயும்
தனித் தனியாக தேடும் பொழுது


எட்டநின்று பார்த்தது
காதல் ....

களித்த காலம் கழிந்து போனதில்
எச்ச விகுதிகளில் தொக்கி
நிற்கிறது
 காலம்
மற்றும்
நான்....


தூர்ந்து போன கனவுகள்
இன்று
சக்கரை பூச்சுடன்


தொலைந்து போன புன்னகை
உதட்டளவில் பூக்கின்றது

சிதறிப் போன கண்ணாடி கனவுகளில்
யாருக்கும் காயம் இல்லை
உடலளவில் ....


Posted by shammi's blog at 3:14 AM 6 comments
Labels: திண்ணை

Monday, May 9, 2011

மரணத்தின் தூதுவன்




அந்த குளக்கரையில் நின்றிருந்த
ஒற்றை நாரையின்
அலகுகளில் காத்து இருக்கின்றான்


எதிர்பார்ப்பின் சாளரம் திறந்து வைத்தபடி
கிணற்றுக்கும் வாய்க் காலுக்கும் இடையே
துள்ளிக் கொண்டு திரிகிறது
ஓர் மீன் கூட்டம்...



காற்றின் கடும் தாக்கம் கண்டு
ஒளிந்து இருக்கும் தாய் பறவையின்
கண்களின் தவிப்பு
இடிக்கு பற்றி எரியும் மரத்தைப்
பார்க்கும் போது ....

மழையின் அடர் இருட்டில்
ஒடுங்கியபடி அமர்ந்து இருக்கும்
தோல் வற்றிப் போன கிழவனின்
அருகே நிற்கும்
கூரையற்ற குட்டிச்சுவர் ...

Posted by shammi's blog at 7:40 AM 5 comments
Labels: திண்ணை

Saturday, April 30, 2011

நேற்றையும் நாளையும்




அறை முழுதும்
நிரம்பிக் கொண்டு இருந்தது
ஞாபகக் குப்பை
இழுத்த மூச்சு வழியே
புழுதிகள் நிரப்பி
நுரை ஈரல் நசுக்கியது ,
சிதறிக்கிடந்த காகிதங்களில்
எழுதிய கிறுக்கல்களை விட
எழுதாதவைகள் அதிகம்
சுமந்து இருந்தன ...
உள்ளிழுத்த கண்ணீர்க் கோடுகள்
நேற்றற்ற
நாளையையும் இன்றையும்
சுமந்து கொண்டு இருக்கின்றன


Posted by shammi's blog at 9:55 PM 0 comments
Labels: உயிரோசை, திண்ணை

அது

கடத்தப்பட்ட நிமிடங்களுள் 
அது ஒளிந்திருந்தது...
நிகழ்வுகளின் ஓர் அங்கமென இருந்தும் 
ஓங்காரக் கூச்சலிடுகிறது 
தவறிவிட்ட சந்தர்பங்களுக்காக ஏங்கி
தவிக்கிறது அது 
படிமங்களுள் படிமானமாக
பாசி பூத்து உள்ளுக்குள்ளே 
மரணிக்கிறது ...
கல்லறை சுவாசமென
மரணித்தவனின் கையில் இருக்கிறது அது ...
அமைதியென ..
Posted by shammi's blog at 8:13 AM 2 comments
Labels: வல்லினம்

Wednesday, April 27, 2011

பகடை



சிக்கல்கள் பிரித்து எடுக்கப்பட்ட உறவுகளுடன்
சதுரங்கம் புதிதாய் !
பகடைகள் உருட்டப்பட
தோல்விக்கான பயணம்
சூசகமாய் துவங்குகிறது......

64 கட்டங்களுக்கும் ஓர் அவதாரமென
சூழ்ச்சிகளும் சந்தர்ப்பங்களும்
குதிரையும் யானையுமாய் ...

காவல்கள் வலுப்பட்ட அரணுக்குள்
பத்திரமாய் அரசனும் அரசியும்
போர் சூத்திரங்கள் மாற்றப்பட
நிசப்த வெளிகளில் இடைபுகுந்த
வெள்ளை தாயாதிகளால்
தோற்கடிக்க படுகின்றார்
கருப்பு ராஜாவும் ராணியும் ....



Posted by shammi's blog at 9:44 AM 4 comments
Labels: திண்ணை

Sunday, April 17, 2011

ஓர் பரி ....


சதுரித்த நிலமொன்றில்
நின்றிருந்தது....
அப்புரவி ...
அழகாய் கண்களை விழித்து
உலகை வெறித்து பார்த்துக்கொண்டு

முழுதும் நகைகளை பூட்டி
கடிவாளங்களுக்கு மத்தியிலும்
சிரித்து..
பற்களை மட்டும் காண்பித்து

ஏனோ?
கனைப்பு சப்தம் மட்டும்
கேட்பதாய் இல்லை ...


பின்னங்கால்களை மெல்ல உயர்த்தி
ஓட பார்த்ததோ?
தளைப்பூட்டிய கால்கள்
பூமிக்குள் வேரோடிப்போய் ....

உயிர்ப்பை தொலைத்து
வான்நோக்கி உயர்ந்து
நின்றது
அந்த வெங்கலப்புரவி ..
சுமார் 15 அடி உயரத்தில் ,

அலங்காரமாய் ...
அடிமையாய் ...



Posted by shammi's blog at 9:38 PM 3 comments
Labels: திண்ணை

Sunday, April 10, 2011

பறவை , பட்டம் மற்றும் மழை


   
எங்கோ தாவி சென்ற பறவை
விட்டு சென்ற எச்ச மிச்சங்கள்
நிழல் கவிதைகளை
அள்ளி தெளித்தன


பிடிமானக் கயறு அறுத்து கொண்டு
பட்டம் , பறவைகளோடு
போரிட்டது ...                                      

காற்றின் அலைவரிசை சாரமாக
சலனங்கள் தவிர்த்து ,
ஒடுக்கப்பட வீதியில்
ஒற்றையாய் திரிந்தது ...

ஓங்கியடித்த மழையில்
வேகத்தில் முழுக்க நனைந்து
ஓரமாக கிழிந்து
நிலைகுலைந்து தரை தொட்டது
கண்ணீரைக் கழுவியது
மழைத் துளிகள் ..
Posted by shammi's blog at 7:07 PM 5 comments
Labels: திண்ணை

Saturday, April 2, 2011

நிழல் மோனம் ..



கூர்மங்கள் மழுங்கிய வாட்களினால்
ஓர் நிழல் யுத்தம்
இருள் போர்வையை கிழித்து
வெளியேறியது வியர்வை வடித்த நிலவு

சங்கடை வார்த்த பால்
மெல்ல உள்ளிறங்க ...
துப்பிய மிச்சமோ பால் வீதியின்
எச்ச நட்சத்திரங்கள் ?

சப்த நாடிகளுள் சூழ் கொண்டு
எரித்த ..இவ்வேளையில்
துயில் கொண்டது அவளின் மௌன மோனம் ...


Posted by shammi's blog at 9:16 PM 2 comments
Labels: திண்ணை

Sunday, March 27, 2011

மீள்தலின் இருப்பு

மறுப்புகள் தாங்கியே இருக்கும் 

அவளது விழிகள் 
 விருப்புகள் போல காட்டிக்கொள்வதில் 
மகா பிரயத்தனங்கள் செய்துக்கொள்வாள் 

பொம்மலாட்ட கைகள் ஆட்டுவிக்க 
ஆடுகிறாள் ...நடனங்களை
உக்கிர நடனங்களில் மட்டுமே 
தெரியும் அவளது உயிர்ப்பு ...

காலக் கோள்கள் அசைத்து பார்த்ததில் 
அசைய மறுத்த அவள் பாதம் 
விலங்கிடப்பட்டது ...
புரட்சி பேசிய அவள் நாவு 
துண்டிக்கப்பட்டது 

இன்னும் இன்னும் என எதிர்ப்புக்கள் 
வலுக்க 
இப்போதெல்லாம் அவள் 
மறுப்புகளை கண்களில் மட்டும் 
தேக்கி கொண்டுவிட்டாள்..

மீட்புக்கென 
அடைக்கப்பட ரௌத்தரம்
விழுங்கி தீர்த்தாள்..
ஆழிப்பேரலை என பொங்கி 
காவு வாங்கியது ...எண்ணற்ற மனிதங்களை ..
Posted by shammi's blog at 8:08 PM 6 comments
Labels: திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ▼  2021 (1)
    • ▼  December (1)
      • மீள்தல் சுகம்
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio