skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, November 11, 2012

இலையுதிர் மரங்கள்


தலைதனில் மரங்களை சுமந்தவள் 
சமதளங்களை நோக்கி 
பயணிக்க எண்ணம் கொண்டாள்


வெள்ளோட்டம் பார்க்கவென
 சிறு கரிச்சான் பறவை ஒன்றைப் பிடித்து 
செய்திகள் ஓதினாள்


வேகத்தடை ஏதும் இல்லா வெளிகள் 
கடந்த அது
பறந்தது .....
ஒரு சதுரித்த சமவெளி 
கண்டு ஆசுவாசித்து ..
தன் செய்திகளை நிலத்திடம் ஓதியது ....

இறக்கை விரித்துப் பறந்து
களைத்து,
அவளின் தலைமீது
 இலைகள் அற்ற 
மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டது


நிலம் உறிஞ்சிய செய்திகளின் 
மிச்சம் அவைகளில் குன்றுகளை
 முளைக்கச் செய்தன .....
புடைத்து எழுந்த குன்றுகள் 

வழியே மீண்டும்
 இலைகள் அற்ற
 மரங்கள் முளைக்கத் துவங்கின ...

Posted by shammi's blog at 3:31 AM 3 comments
Labels: உயிரோசை

Monday, October 1, 2012

ஞாபகார்த்தம் .




இருவிரல் ஓடும் 
இடை நிலுவை
ஒரு சன்ன கீற்று ,

இருள் மறுதலிக்கும் 
வெளிச்சக் காற்று ,

வர்ணம் தொலைத்த 
தூரிகை ...
வெற்று பிரி ,


குட்டி அம்மு 
பிரித்து எடுக்கிறாள்
ஞாபகார்த்தங்களை 

ஒரு முயல்,
 ஒரு யானை 
ஒரு சிங்கம் ....
எல்லாம் வெள்ளையாய் ....



http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5968http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5968

Posted by shammi's blog at 11:15 PM 0 comments
Labels: உயிரோசை

Wednesday, September 26, 2012

கனவுகள் விற்பனைக்கு அல்ல




கனவுகள்  விற்பன்னள்
அவள் ஒருத்தி ..
இருள் சூழ் பொழுதுகள்
மற்றும் அடர்வு மிகுந்த வேளை
அவளின் இரவல் நேரங்கள்

நிறைவேறா ஆவல்கள்
கூடைநிறைய எடுத்து வருகின்றாள்
அவைகளில் பொறுக்கி எடுத்து சிலவற்றை
எண்ணக் கூடைக்குள் திணிக்கிறாள் ,
கொஞ்சம்... கொஞ்சம் ...என
கனத்து போகிறது அக்கூடை ,
அவைகளின் சுமைகள் என்றுமே
இறக்கபடுவதே இல்லை ,
கூடிக்கொண்டே செல்லும் அவை
ஓர் இறுக்கமான வெற்றிடை நாழி
வழியே செலுத்தப்பட
சோதனை
கண்ணாடி கூண்டிற்குள்
மீண்டும் நிறைகிறது
ஈரோட்டா நினைவுத்தளும்பல்கள்
விருப்பமிகு தேடல்களை
இன்று வரை
அவள் விற்பதேயில்லை ,
Posted by shammi's blog at 1:04 AM 1 comments
Labels: உயிரோசை

Tuesday, September 18, 2012

வன்மம்



திணிக்கப்படும்கட்டாய மௌனத்தின்
வசத்தில் வலுவிழந்த வார்த்தைகள்
சேமித்து வைக்கப்படுகின்றன ...
என்றோ ஓர் நாள்
அவை தன் வசம் இழந்து
ஒரு வசவாகவோ, ஆக்ரோஷமாகவோ 
வெளிப்படா பட்சத்தில்...
அங்கே
ஒரு வன்மத்திற்கான
விருட்ச விதை
ஆழமாய் ஊன்றப் படுகிறது..
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5940

Posted by shammi's blog at 10:08 AM 2 comments
Labels: உயிரோசை

Tuesday, September 4, 2012

அகலிகை ....




அவனற்ற  வெளிகளில் 
அமைதி குவியலாக 
சேமித்து வைக்கப்படுகிறது 

அனுமதியற்ற சப்தங்கள் 
கைஅசைத்து 
அழைக்கின்றன,

மறுதலிக்கவே 
தோன்றாமல் 
யாருமற்ற நேரங்களில் 
அவைகளுடன் சேர்ந்து 
புழை  தண்ணீரில் 
கால்களை நீந்தவிடுகிறேன் 

வன்மம் கொண்ட யட்சன் 
காத்து இருந்து 
தாமரை தண்டுகளால் 
வலைபின்னுகிறான் 

அகலிகையாய் மாறுகிறேன் 
அவனின் இரைச்சல் இன்னும் 
இன்னும் என 
சாபங்களை கூட்டிக்கொண்டே
இருக்கிறது ...

விநோதங்களை 
 நிகழ்த்தி கொண்டே 
இருக்கிறது ....

அந்த யாருமற்ற இடமும் 
கல்லாகி  போன நானும் 
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5917

Posted by shammi's blog at 8:28 AM 1 comments
Labels: உயிரோசை

Friday, August 31, 2012

சில வேளைகள்



இரக்கமற்ற பொழுதுகள் 
எங்கேயும் நிறைந்து ,
சுவாசிக்க இயலா அடர்வில் 
அழுத்துகின்றன ....

நேற்று , இன்று ,நாளை 
என்ற கால அட்டவணைகள் 
பிரித்து எழுதவோ 
எதிர்த்து வாதிடவோ அவை 
தயங்குவதில்லை ....

இருள் சூழ் வேளைகளிலும் 
ஒற்றையாய் பாய்மரம் 
விரித்து தனித்தே 
சென்று கொண்டு இருந்தது 
எண்ணப்படகு........

மையப்  புள்ளியாய் 
புரிதல்கள் விடுத்து 
சுற்றிலும் அடங்கலற்ற 
விரிதல்கள் ,விவாதங்களும் 
அவைகளுள் அதீதம் 

தனித்து போன 
அப்பொழுதுகள் உட்சொருகி 
ஓர் சுழல் வட்டமிட்டு 
சுவர்கோழியின் ரீங்கராத்தோடு  
கூச்சல் இட ......துவங்குகிறது 
மற்றுமோர் 
இரக்கமற்ற பொழுதின் 
அத்தியாயம் ...
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5895
Posted by shammi's blog at 10:19 PM 0 comments
Labels: உயிரோசை

Sunday, August 19, 2012

வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் ...

இரவின் நிழல்கள் கோலமிடுகின்றன 
அவைகளின்,
 விரல் பிடித்தே வெளிச்சங்கள்
கதிர்களின் கிரகணங்கள் படர 
மீண்டு வரா தொலைவில் 
புதைந்தன கனவுகளின் வாத்சல்யம் 

நிழலின் படங்கள் ஒருபோதும் 
கலைவதோ அல்ல கலைக்க படுவதோ  இல்லை ...
எங்காகிலும் ஒளிந்து ஒவ்வொரு 
நிகழ்விலும் தலைப்படும்
அவை ...
தர்கிக்கும்  ..

உருகி நிற்கும் தருணங்கள் 
உறையும் நிகழ்வுகள் 
இவைகள்  கிரகண பொழுதில்  
ஒளிகள் அற்று இன்னும் சுற்றி 
 சூர்யனை தகர்க்கும் ...
துகள்கள் சிதறி வளியின்
அடர்வு அதிகப்படும் 

புரியாத காலங்களில்
வாத்சல்யம் அற்று மீண்டும் 
இருளை கை பிடித்து அழைத்து 
செல்கின்றன கற்றையாய் 
நின்ற கிரகங்கள் ...



http://puthu.thinnai.com/?p=14120
Posted by shammi's blog at 6:34 PM 1 comments
Labels: திண்ணை

Tuesday, June 5, 2012

மெலினாவின் கனவொன்றில் ...


அவளின் கைகள் நீண்டு 
வானம் தொட்டே  பூக்கள்
பறிக்கின்றன ....

அவைகளை  மாலையாக்கி   
ஒளியின்  ஊடு உருவலில் 
நீண்டு கொண்டே போகின்றன
 பொம்மை கல்யாணத்திற்கான 
மன மாலைகள் .....

ஓர் மேக
உருவம் செய்து 
அதை யானை எனக்கொண்டு 
இம்மாலைகளை சுமந்து 
வரச்சொல்கிறாள் மெலினா ...

சுமந்து வரப்பெற்ற 
அம்மாலையில் நட்சத்திரங்கள் 
வெப்பம் தாளாமல்
ஒவ்வொன்றாய் உதிர 
மதம் பிடித்து ஓடியது 
 அம்மேகக்  களிறு ....

" விலுக்கென " அசைகிறாள் 
பத்தே வயதான மெலினா ...
அவள் கரங்களின் நாளங்கள்
வழியே 
கீமோ வின் திரவங்கள் 
செலுத்தப்படுகின்றன .....
அசங்கலுற்ற அவள் முகம் 
அம்மதம் பிடித்த யானையின் 
 மேல் கொண்ட 
அச்சம் ஒத்தே  இருந்தது
http://www.vallinam.com.my/issue42/poem4.html
Posted by shammi's blog at 9:21 AM 2 comments
Labels: வல்லினம்

Sunday, May 27, 2012

யாதுமாகி …


நாற்புறச்சட்டகத்தின்  பின்  இருப்பது தெரியாமல்
பேசிக்கொள்கிறார்கள் ..
நிறமிகளின் பின்னே நரை  மறைத்து  நிரந்தரமாகவே
அவை சென்று விட்டதாகவே
நினைத்து கொள்கிறார்கள் …
கண்ணோரச் சுருக்கங்களையும்
மோவாயின் தளர்ந்த தசைகளையும்
நீவி இழந்தவைகளை ஷன நொடிகளில்
பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்
குழந்தையிடமும் சிரியவர்களிடமும் மட்டுமே
தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து
இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில்
சமைத்து பரிமாறுகிறார்கள் ..
தோல்விகளை திரையிட்டு மறைத்து
வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் ..
புழக்கடை தனதாயின் அதிலும் சுகந்தமே வீசுவதாக
பறைசாட்டுவர் …
சமயத்தில் ஆன்மீகமும் …சமயத்தில் நாத்திகமும்
இவர்கள் இருபோர்வை அணிந்து கொள்வர் …
“தன்னை ” சுற்றியே உலகு அமைத்து சூரியனை
சுழலவிடுவர் …
சற்றே அயரும் நேரத்தில்
நீயே நான் எனவும் மாற்றிக்கொள்வர்
சிலவரிகளில் நீங்கள்  வாசிக்கும் பொருட்டு
அவர்கள் உங்கள் அருகிலோ,
அல்லது நீங்களாகவோ
அல்லது நானாகவோ இருக்கக்கூடும் ...

http://puthu.thinnai.com/?p=11669
Posted by shammi's blog at 8:44 PM 1 comments
Labels: திண்ணை

Monday, May 14, 2012

இறக்கை முனையில்

எழுத்துகள் ஒன்றன் பின் ஒன்றாய் 
சிதறிக் கிடந்தன...
அறை முழுதும்... அதில் ஒன்று 
எங்கோ தனை ஒளித்துக்கொண்டது
வார்த்தைகள் அமைக்கும்பொருட்டு
அவ்வொரு எழுத்து நிரந்தரத் தேவையாய்
நின்றுவிட்டது...

சந்து பொந்துகளின் இடுக்குகளில் 
சிக்கி பின் சாய்வாய் 
காற்றாடியின் நடுவே ஒளிந்து கொள்கிறது 
மெல்ல அதன் முனை வாலாய் நீண்டு 
தொங்க ஆரம்பித்தது 

ஒரு கட்டத்தில் 
இறக்கைகள் சுழல 
நின்று இருந்த அந்த எழுத்து இப்போது 
அகங்காரம் கொண்டு 
வட்டமடித்து அறைமுழுவதும் 
கூச்சல் எழுப்ப ஆரம்பிக்கிறது...
http://www.vallinam.com.my/issue41/poem5.html

Posted by shammi's blog at 4:59 AM 2 comments
Labels: வல்லினம்

Tuesday, May 1, 2012

மரப்பாச்சி ..


கோகிக்கு காலம்பர எழுந்ததுலர்ந்து வேலை சரியாக இருந்துண்டு இருந்தது ...அவள் தனக்கு தானே பேசிண்டு இருந்தாள்....இனி கோகியின் பார்வையில் .....

'ஆத்துல கொலு ..வேலை அம்பாரமான்ன குமிஞ்சுன்னா  கிடக்கு ..காலேஜ் போன அம்பி இன்னும் வந்தபாடில்லை ...அவாஅவா ஒரு வேலை செய்யப்படதோ ? செய்ய மாட்டா ..நேக்கு நன்னா தெரியும் இவாள பத்தி ....மாங்கு மாங்குன்னு செய்யணும்னு பகவான் என்னை படச்சுட்டன் '... 

மாமி எங்கேர்ந்தோ  கத்தினாள்"  கோகி ! அடி கோகி ! இங்க சித்த வாயேண்டி ...ஒரு நாழியாறது காபி கேட்டு ..."
இந்த ஆம்ல என்னைவிட்டா நாதி கிடையாது இந்த பரண் அடுக்க , அடுக்களை வேலை செய்ய ...

"தோ வந்துட்டேன் மாமி  ..சித்த இருங்கோ கை வேலைய முடிச்சுட்டு காப்பி தரேன் ..."

அப்படியே  எடுத்த பொம்மையை வெச்சுட்டு அடுக்களை போய் டிகாக்ஷன் இறக்கி ..பால் காய்ச்சி ..ஸ்ட்ராங்கா ஒரு மிடறு முழுங்கினேன் ...

மீண்டும் மாமி அழைத்தாள் "டீ....என்ன பண்றாய் ...? இன்னுமா காபி இறங்கல ?"

"வந்துட்டேன் தோ" ...ஆவி பறக்க நீட்டினேன் ...

"வர வர கிழம் அப்டின்ற எண்ணம் நோக்கு வந்துடுத்து.... டீ..."

இல்லை மா ...கொலு பொம்மையை பார்த்துண்டு இருந்துட்டேன் அது தன் நீங்க கூப்பிட்டதும் உடனே வரமுடியல...என சமாதானம் செய்தேன் 

"ஹ்ம்ம் ....என்ன தான்  சொல்லு கோகி ! நோக்கு முன்னபோல என்மேல் ப்ரியம் இல்லடி ...முன்ன எள்ளுனு சொல்லரச்சே எண்ணையாய் நிற்பாய் ..இப்போ அசமஞ்சம் கொஞ்சம் வந்துடுத்து..."

இல்ல மா அப்படி சொல்லாதேங்கோ ...நீங்க தான் நேக்கு எத்தனை செஞ்சு இருக்கேள் ....மாமியா இருந்தாலும் நேக்கு ஒரு தாய் ஸ்தானம் இல்லையா நீங்கோ .... மனசுல ஏதோ எண்ணம் ஓடினாலும் காமிக்க முடிய்மோ? இது வாக்கப்பட்ட இடம்மாச்சோல்லியோ ?

"சரி டீ போய் வேலைய பாரு...அப்புறம் நேரம் ஆய்டும் ...அம்பி வரப்போல அடை தட்டி அவியல் பண்ணிடு ..."

கிட்டான் வந்துண்டு இருந்தான் ....
மாமியிடம் "சரி மா போய் அந்த பரண்ல இறுக்க மாம்பெட்டிய இறக்கிறேன் ..கிட்டான் வந்து இருக்கான் ..அவன சித்த நாழி ஒத்தாசை பன்னசொல்லுங்கோ ...அப்போ தான் பரண்ல இருந்து மரப்பாச்சியை எடுக்க முடியும் ...
"டேய் கிட்டான் சித்த பரண் மேல ஏறி அந்த சின்ன பெட்டியே எடேன் டா ..."

"சேரி மாமி ...தோ வரேன் ...
இதுதானுங்களா நல்ல பார்த்து சொல்லுங்க அப்புறம் இன்னொரு தபா ஏற சொல்லாதீங்க ...எனக்கு வேலை கிடக்கு "

அதே தான் டா ...ஹ்ம்ம் ..மெல்ல ...

இனி நீ போய் வேலைய பாரு ...

அந்த பெட்டில இருந்து ஓர் நெடி பரவித்து...கொஞ்சம் பழசு கலந்த வாசம் ...ஸ்மரணை எங்கோ இழுத்துண்டு போச்சு ..பெட்டில ...ஒரு பொம்மை கரெல்னு கருப்ப ஈஷிண்டு ...ஆன பரம லக்ஷணமா இருந்துத்து, அதை கைல எடுத்தேனோ, இல்லையோ ...அது பேச ஆரம்பிச்சுடுத்து...சிரிக்காதே ள் ..உண்மையான்ன சொல்றேன் ...

" டீ கோகி.., என்ன தெரியறதா? ..

இல்லையே ...நேக்கு தெரியலை ..ஆன உன் குரல் எங்கோ கேட்டாபல இருக்கு ...

"இருக்கும் டீ ...நீ சின்னவளா இருக்கச்சே எப்போவும் ஓர் மரப்பாச்சி பொம்மையோட ஈஷேண்டே இருப்பாய் இப்போ பெரியவளானதும் கொலுக்கு மட்டும் என்னை எடுத்து சீராட்ட நினைக்கிறாய் "

ஆமாம் இப்போ நினைவு வந்துத்து ...சின்னவளா இருக்கச்சே வசந்திக்கும் நேக்கும் எப்போவும் போட்டியா இருக்கும் உன்னை வெச்சுக்கரதுல ...எப்போவும் நான் தன் அவளாண்ட சண்டைபோட்டு வாங்கிண்டுடுவேன் , அப்போ எவ்ளோ பிடிவாதமா இருப்பேன் ..இப்போ நான் தான் இந்த ஆம் லையே பொறுமைக் காரி தெரியுமோ ?

"ஹ்ம்ம் அப்படி தான் தெரியறாய் ...ஆன எப்போவும் செய்றத செஞ்சுட்டு நான் நான்னு பிலாக்கணம் பாடறாய் அது தான் கொஞ்சம் கூட நன்னால்லை "

நோக்கு என்ன சொல்லிடறாய் நான் படர பாடு இருக்கே ...

"இதை இதை தான் சொல்லறேன் ...எப்படியும் செய்ய போறாய் , அப்புறம் ஏன் இப்படி? ஒரு முறை எனை கிழே விட்டுட்டாய்அப்போ என் கை உடைஞ்சு போச்சு ..அதுக்காக நீ பண்ணின ஆர்ப்பாட்டம் ...பகவானுக்கு தான் தெரியும் ...என் கைய உடனே வைக்கனும்னு அழுது ஆகித்தியம் செய்தாய் ..இப்போ அது இல்லைனாலும் நீ என்ன மாறி இருக்காய் தெரியுமோ ? உன்னை பத்தி நெனைக்கறது இல்லைன்னு , எல்லார் மேலவும் குற்றம் பார்க்கிறாய் ...நிஜமாய் நீ ஒரு மிடறு காபி விழுங்கும் போதே மாமிக்கு காபி கொடுத்து இருக்கபடதா ?அவ கத்தற மட்டும் ஏன் விட்டாய் ?"

உள்ளுக்குள் லேசாய் ஓர் முள் நிரடித்து இருக்குமோ ? நாம அசட்டை பண்ண ஆரம்பிக்கிறோமோ?..நேத்தும் இதே தான் பண்ணினேன் ...சாப்பாடு போட நாழிப்பண்ணினேன் ...பாவம் மாமி அவளால முடியலை அது தான் ஒத்தாசை கேட்டாள் ...பண்ணறத பிலாகனத்தோடு ஏன் பண்ணனும் ...மாமி எத்தனை செய்து இறுக்க சிரிச்ச மொகமா...

" கோகி! இப்போ புரியறதா டீ  ...என்ன சொலறேன்னுட்டு ..."

"ஹ்ம்ம் "....

"அடைக்கு ஊரப்போடரச்சே கொஞ்சம் போல சட்னி செய் ..அம்பிக்கு ரொம்ப இஷ்டம் " மாமி குரல் கொடுத்தாள் ..

விழிப்பு தட்ட எழுந்தேன் , மறுபடியும் செக்கு மாடு ஆட்டமா ,வேலை சொல்லராலே,என்ன செய்ய ,சித்த நேரம் நான் சும்மா இருக்கபடாதே  மாமிக்கு ....

கையில் மரப்பாச்சி சன்ன சிரிப்பு சிரித்தது ....***


Posted by shammi's blog at 6:08 AM 2 comments
Labels: அதீதம்

Sunday, February 19, 2012

யாரோவாகவே இருந்து இருக்கிறாய்



உள்ளில் புதைந்து இருக்கும் உனைக்
கடைந்தேற்றல் இயலாததாகவே
இருந்து வருகிறது ..காரணியாய்
வினவுகள் மட்டுமே ...
உதிர்வித்த நினைவுகளின்
இழைகள் பிடித்து
வலை பின்னுகிறாய்
அம்மெல்லிய ஞாபகங்களை
அதீதம் கோர்த்தே இறுக்குகிறாய் ....
ஸ்படிக பள்ளத்தாக்குகளில் ஆழ்ந்து இறங்கி
பழம் பாசி படர்ந்த மூலைகளில்
கூர்மமாய் அவைகளைக் கொத்தி
புசிக்க ஆரம்பித்தாய் ...
கருமை படர்ந்த வெளிகளில்
உனைக் கரைத்து எடுத்துச் செல்கையில்
வெளிச்சம் தேடி நடந்த கால்கள்
பின்னோடு இருளையும்
இழுத்துச் செல்ல தலைப்பட்டன
இருக்கட்டும் இனி
இதுவே கடைசியென....
Posted by shammi's blog at 3:30 AM 2 comments
Labels: உயிரோசை

Thursday, January 12, 2012

ஓர் பிறப்பும் இறப்பும்


எங்காகிலும் தட்டுபடுகிறதோ
அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ?
நீள் கோடுகளும் அங்காங்கே
புள்ளிகளுமாய்..
அழகின் ஒரு பகுதியை
குத்தகைக்கு எடுத்த பிம்பமென
தாவி தாவிப் பறக்கும் அது …?

மனம் கவர்ந்திழுத்த அதன்
நினைவுகளில்
அழுகிப்போன இதயங்களின்
சுவடுகள் ஏதும் பதிப்பிக்க
அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய்      இல்லை …

மெல்லிய இறக்கைகள் விரித்து
பறக்கும் அவைகளில்
கனந்து போன துன்பங்கள்
கரைந்து போக …
மழையின் சாரல்கள் மிஞ்சியவற்றையும்
கரைக்க ….ஏதோ ஓர் பிறப்பின்
ஆரம்பமும் …முடிவும் …
ஒருங்கே பிரசவித்தது ….
Posted by shammi's blog at 10:58 AM 0 comments
Labels: திண்ணை

...மீண்டும் ....



எண்ணற்ற நட்சத்திரக்
கோள்களில் தேடி த் தேடி
களைத்துபோய் இருக்கையில்
எங்கோ ஒரு மூலையின் ஓரமாய்
கண்சிமிட்டி அழைக்கிறாய்
இறகுகளின் சுமைகளை
அப்போது தான்
உதிர்த்து பரவலாய்
வைத்திருந்தேன் …
அவைகளை எடுத்து பிணைத்து
கொண்டு இருக்கையில் …
சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது
ஒரு காலைப்பொழுது ….
இரவிற்கான காத்திருத்தல்
தொடங்குகிறது …..
Posted by shammi's blog at 10:56 AM 1 comments
Labels: திண்ணை
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ▼  2012 (14)
    • ▼  November (1)
      • இலையுதிர் மரங்கள்
    • ►  October (1)
      • ஞாபகார்த்தம் .
    • ►  September (3)
      • கனவுகள் விற்பனைக்கு அல்ல
      • வன்மம்
      • அகலிகை ....
    • ►  August (2)
      • சில வேளைகள்
      • வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் ...
    • ►  June (1)
      • மெலினாவின் கனவொன்றில் ...
    • ►  May (3)
      • யாதுமாகி …
      • இறக்கை முனையில்
      • மரப்பாச்சி ..
    • ►  February (1)
      • யாரோவாகவே இருந்து இருக்கிறாய்
    • ►  January (2)
      • ஓர் பிறப்பும் இறப்பும்
      • ...மீண்டும் ....
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio