எம் பேர் தேம்மொழி. எல்லாரும் சனியனே, நாயே.. இப்படி கூப்பிட்டு என்னோட நெச பேர் மறந்தே போச்சுங்க. அத விடுங்க.. எங்கதைய கேக்கறீங்களா? யார் கிட்டயாவது சொன்னாதான் மனசு நல்லா இருக்கும், எனக்கும் உதவி பண்ணுவீங்க.
என் பேர்தான் மொதல்லையே சொல்லிட்டேன்.. இன்னொரு தபா சொல்லாட்ட என்ன? நா தஞ்சாவூர்க்காரி.. எங்க அப்பா அம்மா ஒரு தேட்டர் முன்னாடி பஜ்ஜி போண்டா கடை வைச்சு யாவாரம் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ நான் ஸ்கூலுக்கு எல்லாம் போவலங்க. அத ஏன்னு கேக்காதீங்க.. அப்புறம் அந்த கதைய தனியா சொல்லவேண்டி வரும். இப்போதைக்கு ஏன் நான் ஊருக்கு போகணும்ன்னு சொல்றேன். எதுக்கு.. ஏன் ஒருத்தரும் கொண்டு போய் விடமாட்றாங்க இது தான் எனக்கு தெரிய மாட்டேங்குது.
சரி, மொதல்ல நான் ஊரைவிட்டு எப்படி வந்தேன்.. எனக்கு தான் படிப்பு வரலையே. அதுங்காட்டி தேட்டர் வாசலே கதின்னு கிடந்தா.. மனசு படிப்புக்கா போவும். இப்படியே நாள் போச்சு.. எப்போ பாரு அந்த சினிமால கதாநாயகி எப்படி வராளோ அதே மாதரி பொட்டு, மை ன்னு ஜம்னு ஒரு ஸ்டைல் பண்ணிக்குவேன். அதுக்காக நான் பெரிய அழகுன்னு நெனைச்சு ஏமாந்து போவாதீங்க.. எங்க அம்மா கூட திட்டும் விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலமான்னு.
எத்தனையோ தபா சொலிச்சு வேண்டாம் டீ.. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகப்போகுது அப்படின்னு.. கேட்டேனா.. இல்லையே. திங்க, தூங்க, சினிமா பாக்க.. எதாவது ஒரு ஹீரோ வந்து என்கூட டூயட் பாடுவான்ன்னு மனசு நம்புச்சு. அப்போ பார்த்து அந்த சலீம் கடை டீ போடற பாஷா பார்த்து சிரிச்சான்.
அவனும் கொஞ்சம் கருப்பு தான். நம்ம விஜயகாந்த், ரஜினிகாந்து மாதிரின்னு எனக்கும் பிடிச்சுபோச்சு. நானும் சிரிச்சேன். கொஞ்ச நாளா நானும் அவனும் சுத்தாத இடம் இல்லை. எங்க அம்மா வெஞ்சு, சூடு எல்லாம் போட்டுது. பாஷா சொன்னான் 'நீ என் கூட வந்துடு எங்க வாப்பா கிட்ட சொல்லி நிக்கா பண்ணிகறேன்'ன்னு சொன்னான். செரின்னு அவன் கூட போனேன்.
அவனும் சொன்னாப்பல எம் பேர நிஷா பேகம் ன்னு மாத்தி நிக்கா செய்துகிட்டான். அவங்க வீட்ல கொஞ்ச நாள் எல்லாரும் பேசல.அப்புறம் நல்ல பேசினாங்க. ரெண்டு குழந்தைங்க கூட பிறந்துச்சு. நல்லாதான் போச்சு வாழ்க்கை பாஷாவோட தம்பி தீனுக்கு கண்ணாலம் முடியறவர.
அவனுக்கு பணக்கார இடத்துல பரியம் போட்டாங்க, சீர் செனத்தியோட. வந்தவ கொஞ்சம் கடுசா இருந்தா. கொஞ்சம் கொஞ்சமா பிரச்சன ஆரம்பிச்சுது. எங்கயும் போகவும் முடியல. எனக்கு தான் தேட்டர் விட்டா வீடு, அதை தவிர பஸ்ல கூட போகத் தெரியாதே.. குழந்தைங்க பேரு சொல்லலல பாரு.. பையன் பேரு ஜாபர், பொண்ணு பேரு ஆசியா பேகம். ரெண்டுக்கும் ரெண்டு, மூணு வயசாச்சு.
தினம் வேலை அதிகம். மெல்ல செஞ்சா கொழுந்தியா சூடு போடுவா. அதுல வேற கால் எல்லாம் காயம். பாஷா முன்ன மாதிரி இல்லை.. அவனும் தினம் அதிகம் பேச்சு கேட்டு மாறிட்டான்.. பாவம் என்ன செய்வான்? அப்பவும் ஒரு தபா சினிமாக்கு கூட்டிகினு போனான். அதுக்கும் சேர்த்து அவங்க வாப்பா கிட்ட திட்டு வாங்கினான். வர வர எங்கையாவது அடி, சூடு வாங்காத இடம் இருந்தா போயிறலாம்-ன்னு நெனைப்பு வந்துச்சு.
அப்போ பார்த்து பக்கத்து ஸ்டோர்'க்கு பரிமளா அக்கா வந்துச்சு. அது ரொம்ப நல்லா பேசும். "ஏண்டி இப்படி கஷ்டப்படற.. பேசாம இதுக்கு எங்கயாச்சும் போயிறலாம்" அப்படினு அறுதல் சொல்லும். அது வீட்ல டிவி, துணி துவைக்கற மிசின் எல்லாம் இருந்துச்சு. பாக்க ஏக்கமா இருக்கும். நிறைய டிசின்ல புடவை வெச்சு இருக்கும், எனக்கு கூட ரெண்டு குடுத்துச்சு. எனக்கு அது மேல ஒரு பிரியம் வந்துச்சு.
தினம் அதுக்௯ட சித்த நேரம் பேசினா தான் நல்ல இருக்கும். நான் சொல்லறதை எல்லாம் கேக்கும்.
தினம் அதுக்௯ட சித்த நேரம் பேசினா தான் நல்ல இருக்கும். நான் சொல்லறதை எல்லாம் கேக்கும்.
அப்புறம் ஒரு நாள் சொல்லிச்சு "டீ நான் ஒரு இடத்துக்கு கூட்டி போறேன்.. அங்கே வீட்டு வேலை தான். ஒரு வருஷம் வேலை செய்ஞ்சா போதும்.. பணம் நிறைய தருவாங்க. அப்புறம் இங்க வந்தா, திட்டு இல்லாம இருக்கலாம்ல"
எனக்கும் அது தான் செரின்னு தோன்னுச்சு, ஒரு விடிக்கலாம்பர கிளம்பிட்டேன். யார்கிட்டவும் சொல்லவேண்டாம் அப்படினு பரிமளா அக்கா சொல்லிச்சு. செரின்னு, அது கூட கிளம்பிட்டேன். பஸ்ல நிம்மதியா இருந்துச்சு யார் கிட்டவும் பேச்சு கேக்க வேண்டாம்னு, அப்படியே தூங்கிட்டேன். அப்புறம் தான் தெரிஞ்சுது திருப்பூர் வந்துட்டோம்னு.
அங்கே அக்கா ஒரு கடைல சாப்பாடு வாங்கி குடுத்துச்சு. அங்கேயே பல்லு விளக்கி சாப்டுட்டேன்.
அப்புறம் ஒரு வீட்டுக்கு கூட்டி போய் அக்கா சொல்லிச்சி " பாருடி நிஷா.. இங்க ஒழுங்கா இருந்தீனா பணம் நெறய குடுப்பாங்க.. அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு ஊருக்கு வரும் போது உம்புருஷன் உன்ன நல்ல வெச்சுக்குவான், உம்புகுந்த வீட்டு மனுஷங்களும் உன்ன தாங்குவாங்க"
அந்த வீட்ல வெறும் பொம்பளைங்களா இருந்தாங்க. நான் நெனச்சேன் ஏதும் வேலைக்கு போறவங்க இங்க தங்கிகினு இருக்காங்கன்னு. அக்காவும் அப்படி தான் சொல்லி விட்டுட்டு போச்சு.
அக்கா கிளம்பும் போது, செரி.. நம்பளும் கிளம்பிறலாம் பேசாம ஊருக்கு போய் ரெண்டு உதை வாங்கினு இருந்தர்லாம்னு தோணிச்சு.. ஆனா அப்பறம் காசோட போகலாம், அப்போ தான் மரியாதை இருக்கும் அப்டின்னு இருந்துட்டேன்.
அக்கா போனதுக்கு அப்புறம், சாயங்காலமா ஒரு பொண்ணு வந்து அக்கா பூ வெச்சுக்கணு பூ குடுத்து போச்சு. சேரி.. இம்மா நல்லவங்க கிட்ட தான் அக்கா நம்மள சேர்த்து இருக்குனு நெனைச்சு சந்தோசப்பட்டேன். அப்புறம் ஒரு ஒம்பது மணிக்கு மேல அங்கே நெறய ஆம்பளைங்க வர ஆரம்பிச்சாங்க.
என்னை ஒரு ரூம்ல தள்ளிவிட்டுட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சுது இது ஒரு சாக்கடைன்னு. ஆரம்பத்துல மாட்டேன்னு சொல்லப்போய் ஒரே அடி, உதை. அப்படியும் விட்டாங்களா.. விடமாட்டாங்க. ஒரு ஊசி போட்டு மயக்கம் வரவெச்சு, தப்பிக்க ஒரு வழிகூட இல்லை.
தினம் உடம்பு எல்லாம் நோவும். வெறி நாய்க்கு இரையானது போல. என்ன செய்ய? ஒரு சின்ன குடும்ப கஷ்டத்துக்கு பயந்து ஓடி வந்து மாட்டிகிட்டேன்.
தினம் உடம்பு எல்லாம் நோவும். வெறி நாய்க்கு இரையானது போல. என்ன செய்ய? ஒரு சின்ன குடும்ப கஷ்டத்துக்கு பயந்து ஓடி வந்து மாட்டிகிட்டேன்.
பகல் முழுக்க ஒரு இருட்டு ரூம்ல அடச்சு வெச்சு இருப்பாங்க.. சாயங்காலமா ஒரு ஊசி போட்டு ஒரு ரூம்புல கொண்டு போய் தள்ளிருவாங்க. சாவறதுக்கு ரெண்டு தபா முயற்சி பண்ணியதால கால் முழுக்க இரும்பா காய்ச்சு சூடு போட்டாங்க. அது வேற நடக்கவும் முடியாம போய்டிச்சு. சூடு போட இனி இடமே இல்லை.
இப்படியே மூணு வருஷம் ஓடி போச்சு.
ஒருத்தன் தினம் வருவான். அவன் தான் கேட்டான், " நீ பேசாம என் கூட வரியா.. நான் உன்னை ஊர்ல கொண்டுபோய் விடறேன்"ன்னான். சரி இந்த நரகத்துல இருந்து தப்பிச்சா போதும்ன்னு அவன் கூட கிளம்பிட்டேன்.
பாவம் அவனும் பணம் அதிகம் கொண்டு வரல. என்னை வெச்சு இந்த இடத்துல அதிகம் சம்பாதிக்க முடியலன்னு அந்த பெரிய அக்கா, "குடுக்கறத குடு" அப்படினு இவன் கிட்ட ஒரு ரெண்டாயிரம் ரூபாய் வாங்கிக்கிட்டு என்னை விட்டுட்டாங்க.
இவன் பேர் மாரி. பாவம் அவனுக்கு கல்யாணமாகி சம்சாரம் அவன் கூட இல்லையாம். ரெண்டு குழந்தைங்கன்னு சொன்னான். அவன் சொல்ல சொல்ல எனுக்கு என்னோட குழந்தைங்க நெனைப்பு வந்துடுச்சு.
மாரி கேட்டான்,"எந்த ஊரு புள்ள நீ ?"
டபக்குனு சொல்லிட்டேன் "தஞ்சாவூர்.. அங்கே ஒரு தியேட்டர் முன்னாடி பஜ்ஜி போண்டா கடை எங்களது "
"சரி புள்ள.. நான் போய் பாத்துட்டு வந்து உன்னை அழைச்சுகிட்டு போறேன்"
ரெண்டு நாள் கழிச்சு வந்தான். "அப்படி யாரும் அங்க இப்போ இல்லை.. அப்புறம் டீ கடை பாஷா குடும்பம் எங்கேயோ வெளியூர் போய்ட்டாங்க.. யாரன்டையும் சொல்லிட்டு போகலையாம்.. பேசாம நீ என்கூடவே இருந்திரு புள்ள.. எம்பிள்ளைங்களுக்கு ஒரு தாயா"
யோசிக்கறதுக்கு முடியலை.. ஒன்னும் புரியல, எங்க போய் தேட எம்புள்ளைங்கள.. எம்புருஷனை..?
பேசாம இவன் கூட.. அதான் இந்த மாரி கூடவே இருந்துட்டேன். இப்போ ஆச்சு பத்து வருஷம். இந்த குழந்தைங்க இப்போ பள்ளிக்கூடம் போகுதுங்க. எம் புள்ளைங்க என்ன பண்ணுதோ, என்ன ஆச்சோ ?
இப்போவும் மனசுல தஞ்சாவூர் போய் தேடி பார்க்கணும்னு ஏக்கமா இருக்குது.. ஆனா எனக்கு அங்க போவ சரியான பஸ்சு கூட தெரியாது. இப்படி உங்கள மாதிரி யார் கிட்டவாச்சும் சொன்னா, எங்கயாவது எம்புள்ளைங்கள பார்த்தா சொல்லுவீங்க தானே ?
சரிங்க எனக்கு வேலைக்கு கிளம்பற நேரம் ஆச்சு. இப்போ போனாத்தான் நாலு வீடு வேலை செய்ஞ்சு முடிக்கமுடியும்.
மறக்காம எனக்காக கொஞ்சம் தேடுங்க.. தஞ்சாவூர் போனா... என்னையும் கூட்டிட்டு போங்க.. கெஞ்சிக் கேக்கறேன்..!